’தீரன்’ பட பாணியில் துப்பாக்கி முனையில் நள்ளிரவில் கொள்ளை!

அரக்கோணம் அருகே வீடு புகுந்து 3 பெண்கள் உள்பட 4 பேரை துப்பாக்கியால் சுட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரக்கோணம் அடுத்த செய்யூர் கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபி என்பவரது மனைவி சுதா (வயது 52). மகன் புஷ்கரன் (24).ஆடிட்டர் ஒருவரிடம் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவர்கள் கிராமத்திற்கு வெளியில் தங்களுக்கு சொந்தமான வயலின் நடுவே தனியாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். நேற்று இரவு புஷ்கரன் அவரது தாயார் சுதா, பெரியம்மா லதா (57), பாட்டி ரஞ்சிதம்மாள் (76) ஆகியோர் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் முகமூடி அணிந்திருந்த மர்ம நபர்கள் 3 பேர் வீட்டின் கதவைத் தட்டினர். யாரோ உறவினர் வந்திருப்பதாக நினைத்த புஷ்கரன் கதவைத் திறக்கச் சென்றார்.

இருந்தாலும் சந்தேகத்துடன் மெதுவாக கதவை திறந்தார். அப்போது வீட்டிற்கு வெளியே முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கையில் துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சுதாரித்துக்கொண்ட அவர் உடனடியாக கதவை உட்புறமாக பூட்டினார். அந்த நேரத்தில் மர்மநபர் ஒருவர் வீட்டின் ஜன்னல் வழியாக புஷ்கரனை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த புஷ்கரன் அலறி துடித்தார்.

சத்தம் கேட்டு கண்விழித்த அவரது குடும்பத்தினர் கதறி கூச்சலிட்டனர். அந்த நேரத்தில் மர்மநபர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். மேலும் புஷ்கரனின் தாயார், பெரியம்மா, பாட்டி ஆகியோரையும் துப்பாக்கியால் சுட்டனர். அவர்கள் படுகாயம் அடைந்தனர். புஷ்கரனை கத்தியால் வெட்டினர். இதில் அவர் மயங்கினார்.

இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் மாறி மாறி பேசி அந்த கும்பல் அவர்களை மிரட்டினர்.

துப்பாக்கி முனையில் மிரட்டிய கும்பல் புஷ்கரன் தாயார் உள்ளிட்ட பெண்கள் அணிந்திருந்த நகைகளை பறித்தனர். மேலும் வீட்டில் இருந்த நகைகளையும் கொள்ளையடித்தனர்.

மொத்தம் 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரம், 3 செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் அவர்கள் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவினர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்க கூடாது. மீறி புகார் அளித்தால் நாங்கள் மீண்டும் இங்கு வருவோம். உங்கள் அனைவரையும் கொலை செய்வோம் என மிரட்டி விட்டு சென்று விட்டனர்.

புஷ்கரன் செல்போன் மட்டும் கொள்ளையர்கள் கண்ணில்படவில்லை. அந்த போன் மூலம் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த புஷ்கரன், சுதா, லதா மற்றும் ரஞ்சிதம்மாள் உட்பட 4 பேரையும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தீரன் சினிமா பட பாணியில் ஊருக்கு வெளியில் விவசாய நிலத்தில் தனியாக வீடு இருப்பதை நன்றாக நோட்டமிட்டு கும்பல் கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர். அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி என மொழிகளில் பேசியதால் இவர்கள் வட இந்திய கொள்ளையர்களாக இருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!