கொரோனாவால் கொள்ளையனாக மாறிய என்ஜினீயர்!

கொரோனாவால் வேலை இழந்த என்ஜினீயர் கொள்ளையனாக மாறி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துள்ளார். இதுசம்பந்தமான வீடியோ காட்சி அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் தேசிய வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையம் உள்ளது. பரபரப்பாக காணப்படும் இடத்தில் அமைந்துள்ள இந்த ஏ.டி.எம். மையத்தில் கடந்த 13-ந் தேதி நள்ளிரவில் புகுந்த ஒருவர் இரும்பு கம்பியால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.

அந்த ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 12.20 மணி அளவில் கண்ணாடி அணிந்து வந்த அந்த நபர், 2 முககவசம் அணிந்து இரும்பு கம்பியால் உடைப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.

இதன் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை போலீசார் ரோந்து சென்றபோது அங்கு சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்தான் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்றது தெரிந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர், ராமநாதபுரம் ஓம்சக்திநகர் வடக்கு பகுதியை சேர்ந்த சிவச்சந்திரன் (வயது35) என்பது தெரிந்தது. பி.இ படித்துள்ள சிவச்சந்திரன் மதுரையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் வேலை இழந்து வீட்டில் இருந்துள்ளார்.

இவர் முதல் மனைவியுடன் சேர்ந்து வாழாத நிலையில் தன்னுடன் வேலைபார்த்தவரை 2-வதாக திருமணம் செய்து அவரையும் பிரிந்து வாழ்ந்து வந்தாராம்.

வேலை இழப்பு மற்றும் செலவிற்கு பணம் இல்லாதது, மனைவி பிரிந்து சென்றது போன்ற காரணங்களினால் மனம் உடைந்து காணப்பட்ட சிவச்சந்திரன் அதற்காக சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில்தான் அவர், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!