சூரசம்ஹாரம்- விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

ஐந்து நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஆறாம் நாளாம் இன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடால் உபவாசம் இருந்து மாலையில் நடைபெறும் சூரசம்ஹாரத்தை கண்ட பிறகு விரதத்தை முடிக்க வேண்டும்.

முருகக் கடவுளின் பராக்கிரமங்களைச் சொல்வது சூரசம்ஹாரம். சூரபத்மன் ஆணவத்தில் முருகக் கடவுளோடு போர்புரிந்தான். தன் வலிமையாலும் மாயையாலும் முருகனை வெல்ல நினைத்தான். ஆனால், ஆதிமுதல்வானான ஈசனின் மகனுக்கு முன்பாக அவை தோற்றன. முருகனின் கை வேலுக்கு சக்திவேல் என்றுபெயர். அன்னையே தன் அம்சமாக அந்த வேலை முருகக் கடவுளுக்கு வழங்கினார். அந்த சக்திவேல் சூரர் படையை அழித்தது.

வீரத்தால் முருகனை வெல்ல முடியாது என்றுணர்ந்த சூரபத்மன், இறுதியில் தன் மாயையால் வெல்ல நினைத்து மாமரமாகி நின்றான். வீரத்தை வெல்ல சக்தியாக நின்ற வேல், மாயையை வெல்ல ஞானவேலாக மாறியது. மாயையை இருகூராகக் கிழித்தது. ஞானத்தின் தீண்டுதலால் மாயை அகல அந்த மாமரம், மாயை அற்ற சேவலாகவும் மயிலாகவும் மாறியது. சூர சம்ஹாரம், ஞான உபதேசமாக மாறிப்போக பகைவனான சூரபத்மன் முருகக் கடவுளின் புகழ்போற்றும் கொடியும் வாகனமும் ஆனான். ஆணவம் அழிந்து ஞானமும் பெற்றுவிட்டால் எந்த ஆன்மாவுமந்தப் பரமாத்மாவோடு ஐக்கியமாகிவிடலாம் என்பது கந்த சஷ்டி சொல்லும் வாழ்க்கை ரகசியம்.

கந்த சஷ்டி விரதத்தின் ஆறாவது நாளான இன்று சூரசம்ஹாரத்தை தரிசித்து நீராடிப் பின் முருகனை வழிபட வேண்டும். ஐந்து நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஆறாம் நாளாம் இன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடால் உபவாசம் இருந்து மாலையில் நடைபெறும் சூரசம்ஹாரத்தை கண்ட பிறகு விரதத்தை முடிக்க வேண்டும். ஒருசிலர் சூரசம்ஹாரம் முடிந்ததும் விரதத்தை முடித்து உணவு எடுத்துக் கொள்வார்கள். அது தவறு. ஏழாவது நாள் காலையில் முருகப்பெருமானை தரிசித்த பின்பு உணவு உண்டு விரதம் முடிப்பதே சிறந்தது.

விரதத்தில் முக்கியமானது பக்தி. இந்த ஆறுநாள்களும் முருகனை மனதில் நினைத்துத் துதித்த வண்ணம் இருக்க வேண்டும். அவ்வாறு விரதம் இருந்தால் முருகப்பெருமானின் அருள் ஸித்திக்கும் என்பது நம்பிக்கை.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!