நாட்டு பட்டாசுகளை எடுத்து வந்த தந்தை, மகனுக்கு நடந்த கொடூரம்!

புதுச்சேரி அருகே நாட்டு பட்டாசுகளை மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்த போது வெடித்து சிதறியதில் தந்தை, மகன் 2 பேரும் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

வெளிநாட்டில் வேலை செய்தவர்
புதுவை அரியாங்குப்பம் காக்காயந்தோப்பை சேர்ந்தவர் கலைநேசன் (வயது 37). இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு பகுதியை சேர்ந்த ரூபனாவுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பிரதீஷ் (7) என்ற மகனும், 11 மாத கைக்குழந்தையும் உள்ளனர்.

கலைநேசன் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஊர் திரும்பினார். கொரோனா பரவல் காரணமாக அவர் மீண்டும் வெளிநாடு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. எனவே புதுவையில் உள்ள ஒரு தனியார் லேத் பட்டறையில் டர்னராக கலைநேசன் வேலை செய்து வந்தார். ரூபனா புதுவை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த பணியில் நர்சாக வேலை செய்து வருகிறார்.


நாட்டு பட்டாசு
தீபாவளி பண்டிகையையொட்டி அரியாங்குப்பத்தில் தயாரித்த நாட்டு பட்டாசுகளை விற்பனை செய்ய மாமனார் வீட்டில் கலைநேசன் கொடுத்திருந்தார். மேலும் தீபாவளி பண்டிகைக்காக ரூபனா தனது குழந்தைகளுடன் தாயார் வீட்டில் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் தீபாவளி அன்று கலைநேசன் மாமனார் வீட்டில் உள்ள மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க சென்றார். பின்னர் கலைநேசன் தனது மனைவியை அரியாங்குப்பம் வீட்டுக்கு அழைத்தார். அதற்கு ரூபனா பிறகு வருவதாக தெரிவித்தார்.


தந்தை- மகன் உடல் சிதறி பலி
இதையடுத்து மனைவியையும், கைக்குழந்தையையும் கூனிமேடு கிராமத்தில் உள்ள மாமனார் வீட்டில் விட்டுவிட்டு கலைநேசன், தனது மகன் பிரதீசுடன் புறப்பட்டார். அப்போது மாமனார் வீட்டில் விற்பனையாகாமல் இருந்த நாட்டு பட்டாசுகளை ஒரு கட்டை பையில் கட்டி மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வந்தார்.
புதுவை – தமிழக எல்லையான கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்த நாட்டு பட்டாசுகள் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த கலைநேசன் மற்றும் அவரது மகன் பிரதீஷ் இருவரும் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.


100 மீட்டருக்கு…
இவர்களது உடல் பாகங்கள் சுமார் 100 மீட்டர் சுற்றளவுக்கு சிதறி அங்குள்ள கட்டிடங்கள், வீடுகளின் மீது கிடந்தன. அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும் துண்டு துண்டாக சிதறி கிடந்தது.
இந்த சம்பவத்தின்போது அந்த வழியாக வந்த வாகனங்கள் மற்றும் அருகில் நிறுத்தியிருந்த லாரி, கார் மற்றும் வீடுகளின் கூரைகளும் சேதமடைந்தன. இந்த சம்பவத்தை பார்த்தபோது ஏதோ சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததுபோல் இருந்தது.


3 பேர் காயம்
வெடி விபத்தின்போது அந்த வழியாக தனித்தனி வாகனங்களில் வந்த சர்புதீன், கணேசன் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த பயங்கர சம்பவம் புதுச்சேரி – தமிழக எல்லையில் நடந்ததால் இருமாநில போலீசாரும் வெடிவிபத்து குறித்து விசாரணை நடத்தினர்.


விபத்து நடந்த இடம் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் என்பதால் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்னர்.

போலீஸ் டி.ஐ.ஜி. விசாரணை
வெடிவிபத்து நடந்த இடத்தை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். மேலும் தடயவியல் துணை இயக்குனர் சண்முகம் சம்பவ இடத்தை பார்வையிட்டு வெடிமருந்து துகள்களை சேகரித்தார்.


விபத்தில் உடல் சிதறி இறந்த தந்தை, மகன் உடல்கள் கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல் அடையாளம் தெரியாத அளவில் உருக்குலைந்து இருந்ததை பார்த்து ரூபனா மற்றும் அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

மனைவி, கைக்குழந்தை உயிர் தப்பினர்
தீபாவளி பண்டிகை கொண்டாட தனது வீட்டுக்கு வருமாறு கலைநேசன் அழைத்தபோது அப்புறம் வருவதாக ரூபனா தெரிவித்ததால் அவரும், கைக்குழந்தையும் உயிர்தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!