முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் அடக்கம்

நடிகர் புனித் ராஜ்குமார் உடல் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. முதல்-மந்திரி பசவரா பொம்மை உள்பட தலைவர்கள், நடிகர்-நடிகைகள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

சோகத்தில் மூழ்கடித்தது

கன்னட திரை உலகின் பிதாமகன் மறைந்த டாக்டர் நடிகர் ராஜ்குமாருக்கு 5-வதாக பிறந்தவர் புனித் ராஜ்குமார்(வயது 46).அவர் கடந்த மாதம்(அக்டோபர்) 29-ந் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணம் அடைந்தார். கன்னட திரை உலகில் ‘பவர் ஸ்டார்’ என்ற பெயரை பெற்ற புனித் ராஜ்குமாரின் மறைவு, ஒட்டுமொத்த கர்நாடக மக்களை சோகத்தில் மூழ்கடித்தது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக பெங்களூரு கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் புனித் ராஜ்குமார் உடல் வைக்கப்பட்டது. அங்கு 29-ந் தேதி இரவு 7 மணிக்கு அவரது உடல் அங்கு பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகத்தின் மூலை முடுக்குகளில் இருந்து லட்சக்கணக்கான அவரது ரசிகர்களும், மக்களும் வந்து நேரில் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர். அவர்களின் அழுகுரல் விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது. கடந்த 29-ந் தேதி இரவு 7 மணிக்கு பொதுமக்கள் கன்டீரவா மைதானத்தில் வைத்து புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்த தொடங்கினர். நேற்று அதிகாலை 4 மணி வரை அவருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். 36 மணி நேரத்திற்கும் மேல் ரசிகர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. புனித் ராஜ்குமாரின் மூத்த மகள் துருதி, அமெரிக்காவில் இருந்து வந்து நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தந்தையின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

13 கிலோ மீட்டர் ஊர்வலம்

ராஜ்குமார் மற்றும் பர்வதம்மா ஆகியோரின் சமாதி அருகே புனித் ராஜ்குமாரின் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏற்கனவே அறிவித்தபடி புனித் ராஜ்குமாரின் உடல், ரசிகர்கள் பார்க்கும் வகையில் கண்ணாடி வாகனத்தில் வைக்கப்பட்டு, ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அதில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த இறுதி ஊர்வலம் நேற்று காலை 5 மணியளவில் தொடங்கியது. ஹட்சன் சர்க்கிள், கே.ஜி.ரோடு, மைசூரு வங்கி சர்க்கிள், சேஷாத்திபுரம் ரோடு, சாளுக்கிய சர்க்கிள், யஷ்வந்தபுரம் வழியாக கன்டீரவா ஸ்டுடியோவை காலை 6 மணியளவில் அடைந்தது. 13 கிலோ மீட்டர் தூரம் இறுதி ஊர்வலம் நடந்தது.

இறுதி ஊர்வலம் சென்ற பாதையில் பொதுமக்கள், ரசிகர்கள் சாலையின் இருபுறமும் நின்று, புனித் ராஜ்குமாரின் உடலை பார்த்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அப்பு மீண்டும் பிறந்து வாருங்கள் என்று சத்தமாக குரல் எழுப்பி கதறி அழுது பிரியா விடை கொடுத்தனர். அவரது உடலை கொண்டு சென்ற வாகனம், பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த வாகனத்தின் முகப்பில் புனித் ராஜ்குமாரின் உருவ படம் வைக்கப்பட்டிருந்தது.

தலையில் முத்தமிட்டார்

காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் இல்லை என்பதால், இறுதி ஊர்வலம் ஒரு மணி நேரத்தில் கன்டீரவா ஸ்டுடியோவை அடைந்தது. அங்கு சென்றதும், அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக அவரது உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. கர்நாடக அரசு சார்பில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அப்போது கடும் துக்கத்தை வெளிப்படுத்திய அவர் கண்ணீர் விட்டப்படி, புனித் ராஜ்குமாரின் உடலை தொட்டார். அவரது தலையில் முத்தமிட்டு பிரியா விடை கொடுத்தார். அவரை தொடர்ந்து போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண், கலால்துறை மந்திரி கோபாலய்யா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், நடிகர்கள் சுதீப், ஜக்கேஷ், உபேந்திரா, கணேஷ், நடிகைகள் தாரா, ரஷிதா ராம் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இறுதிச்சடங்குகள்

அதைத்தொடர்ந்து போலீசார் வானத்தை நோக்கி மூன்று முறை சுட்டனர். 21 குண்டுகள் முழங்கப்பட்டது. துப்பாக்கி குண்டுகள் முழங்க புனித் ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பிறகு தேசிய கொடியை எடுத்து அவரது மனைவி அஸ்வினியிடம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஒப்படைத்தார். உடன் இருந்த அவரது மகள்களும் அதை பெற்று கொண்டனர். போலீஸ் பேண்டு இசை குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர். பிறகு ஈடிகா சமுதாய வழக்கப்படி அவரது உடலுக்கு குடும்பத்தினர் இறுதிச்சடங்குகள் செய்தனர். அவரது அண்ணன் ராகவேந்திரா ராஜ்குமாரின் மகன் வினய் இந்த சடங்குகளை செய்தார். அதன் பிறகு காலை 7.45 மணி அளவில் புனித் ராஜ்குமாரின் உடல் அங்கு தோண்டப்பட்டிருந்த குழியில் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி, மகள்கள் வந்திதா, துருதி, சகோதரர்கள் ராகவேந்திரா ராஜ்குமார், சிவராஜ்குமார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு, அவருக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர். அதேபோல் அரசியல் தலைவர்களும் பிரியாவிடை கொடுத்தனர். பின்னர் உடல் புதைக்கப்பட்டு மூடப்பட்டதும், அதன் மீது மலர் போர்வை போர்த்தப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக இறுதிச்சடங்குகள், திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே செய்து முடிக்கப்பட்டது.

முக்கிய பிரமுகர்கள்

அதன் பிறகு புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினர் அங்கிருந்து காரில் சதாசிவநகரில் உள்ள தங்கள் வீட்டிற்கு வந்தனர். இறுதி ஊர்வலத்தின்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கன்டீரவா மைதானத்தில் இருந்து கன்டீரவா ஸ்டுடியோ வரை சாலையின் இருபுறமும் தடுப்புகளை வைத்து போலீசார் அடைத்திருந்தனர். இறுதி ஊர்வலம் தொடங்கியது முதல் அதாவது காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை அந்த சாலையில் வாகனங்கள் செல்லவோ, பொதுமக்கள் நடந்து செல்லவோ அனுமதிக்கப்படவில்லை.

இறுதிச்சடங்குகள் நடைபெற்ற இடத்திலும் அதிக எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அங்கு குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உள்ளே அனுமதி அளிக்கப்படவில்லை. அதனால் அங்கு கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள், கன்டீரவா ஸ்டுடியோவுக்கு வெளியே காத்திருந்தனர்.

சமாதிக்கு செல்ல ரசிகர்களுக்கு தடை

புனித் ராஜ்குமாரின் உடல் நேற்று கன்டீரவா ஸ்டுடியோவில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு அஞ்சலி செலுத்த கர்நாடகம் முழுவதும் இருந்து ஏராளமான ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் குடும்பத்தினர் நாளை(செவ்வாய்க்கிழமை) பால்-நெய் சடங்கு செய்ய வேண்டி இருப்பதால், நாளை வரை சமாதி அருகில் வர ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு அமல்

புனித் ராஜ்குமார் உடல் அடக்கம் செய்யப்பட்டாலும், அவருக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். தற்போதைக்கு அங்கு குடும்பத்தினரை தவிர யாரையும் அனுமதிக்கக்கூடாது என்று அரசு, போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. அங்கு வரும் ரசிகர்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கன்டீரவா ஸ்டுடியோவில் அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பகல்-இரவாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!