அஷ்டமச் சனி யாருடைய தொழிலை பாதிக்கும்..?

உலக அளவில் பன்னாட்டு வணிகத்தில் அதிக முதலீடு செய்த முதலீட்டாளர்கள், தொழிலில் கொடி கட்டி பறந்தவர்கள் கூட மிக சாதாரணமாக கண் இமைக்கும் முன் தொழிலில் சரிசெய்ய முடியாத இழப்பை சந்திக்கிறார்கள்.

ஒரு மனிதனுடைய வாழ்வாதாரமே அவர்களுடைய தொழில்தான். சிலர் எந்த தொழில் செய்தாலும் பன் மடங்காக பெருகி கொண்டே இருக்கும். பரம்பரை பரம்பரையாக தொழிலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களாக இருப்பார்கள்.

உலக நடப்பிற்கு ஏற்ப புதிய தொழில்களாக உருவாக்கி கொண்டே இருப்பார்கள். இவர்கள் தொழிலை கண்டு பிடித்தார்களா? அல்லது தொழில் இவர்களை கண்டு பிடித்ததா? என்று வியக்கும் அளவிற்கு தொழில் துறையில் வெற்றி வாகை சூடுவார்கள்.

உத்தியோகமாக இருந்தால் அரசு அல்லது தனியார் துறை எந்த வேலையாக இருந்தாலும் வேலைக்கு சேர்ந்த நாள் முதல் ரிட்டயர்மென்ட் வரை ஒரே வேலையில் இருந்து பெரும் பாராட்டு, புகழ் பெறுவார்கள். இவர்களுக்கு வாழ்க்கையில் ஏழரை சனி, அஷ்டமச் சனியே வராதோ? என்று எண்ணும் அளவிற்கு ஏற்றம் மிகுதியாக இருக்கும்.

சிலருக்கு தொழிலில் திடீர் ஏற்ற, இறக்கம், தடை, தாமதம், பண விரயம், பண இழப்பு, தவறான தொழில் முதலீடு செய்து பாதிப்படைகிறார்கள். உலக அளவில் பன்னாட்டு வணிகத்தில் அதிக முதலீடு செய்த முதலீட்டாளர்கள், தொழிலில் கொடி கட்டி பறந்தவர்கள் கூட மிக சாதாரணமாக கண் இமைக்கும் முன் தொழிலில் சரிசெய்ய முடியாத இழப்பை சந்திக்கிறார்கள். இதனால் தொழிலை விட்டு விலகவும் முடியாமல் மேலே தொழிலை தொடரவும் முடியாமல் மன உளைச்சலை சந்திக்கிறார்கள்.

வெகு சிலருக்கு தொழிலாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தொழிலாளிகள் வேலைக்கு செல்லாமல் முதலீட்டாளர்கள் மேல் வழக்கு தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு தொழில் முடக்கமும் தொழிலாளிகளுக்கு வேலை இழப்பு வழக்கும் மிகுதியாகுகிறது.

3 சுற்று அஷ்டமச் சனியை கடந்தவர்கள் பலர் எந்த பதட்டமும் இல்லாமல் நிதானமாக சனி பகவான் என்றால் யார்? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். 3 சுற்றிலும் அடி வாங்கி ரண வேதனையில் முற்றும் துறந்த முனிவராக ஞான மார்க்கத்திற்கு முக்திக்கு வழி தேடி சென்றவர்களும் இருக்கிறார்கள்.

அப்படி என்றால் அஷ்டமச் சனி யாருடைய தொழிலை பாதிக்கும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

ஜனன கால ஜாதகத்தில் லக்னம் வலிமை பெற்றவர்களையும் சந்திரன், சனிக்கு குரு பார்வை இருப்பவர்களுக்கும், தர்ம கர்மாதிபதி யோகம் அமைந்தவர்களையும், தசா புக்தி சாதகமாக அமைந்தவர்களையும் எந்த சனிப் பெயர்ச்சியும் எதுவும் செய்யாது. மேலே கூறிய அமைப்புகள் இருந்தும் ஜாதகத்தில் சாதகமான தசா புத்தி இல்லாமல் போனாலும் குரு, சனி, சந்திரன் பலவீனமாக இருந்தாலும் தாக்கம் மிகுதியாகவே இருக்கும்.

அஷ்டமச் சனியால் தொழில் பாதிப்பு இருப்பவர்கள் பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் தூக்குவோர், துப்புரவு தொழிலாளிகள் இயன்ற தொண்டும் உதவியும் செய்துவர தொழிலில், உத்தியோக உயர்வு உண்டாகும்.

மேலும், சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாளில் ஈஸ்வரனை வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!