ஆஸ்கார் விருது சசிகலாவின் நடிப்புக்கு கொடுக்கலாம் – ஜெயக்குமார் தாக்கு!

ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா சென்று இருப்பதை யாரும் வரலாற்று நிகழ்வாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா சென்றது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் சென்று வருகிறார்கள்.

இன்று சசிகலா ஜெயலலிதா நினைவிடத்துக்கு போய் இருப்பதையும் அது போன்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். லட்சக்கணக்கில் சென்றவர்களில் இவரும் ஒருவர் என்றுதான் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர் எவ்வளவு தான் பில்டப் கொடுத்தாலும் அது செயற்கையாக தான் இருக்கும். இயற்கையாக இருக்காது.

இதில் பெரிய விசே‌ஷம் எதுவும் கிடையாது. ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா சென்றது பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது. அவர் நினைப்பது எதுவும் நடக்காது.

அ.தி.மு.க. யானை பலம் கொண்டது. அதன் மீது ஒரு கொசு போய் உட்கார்ந்து கொண்டு நான்தான் யானையை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் அதை நகைச் சுவையாகதான் எல்லோரும் பார்ப்பார்கள்.

எல்லோரும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்வது போல் இன்று சசிகலா சென்று இருக்கிறார்.

அ.தி.மு.க. பொன்விழா 17-ந்தேதி தொடங்குகிறது. ஆனால் 16-ந்தேதியான இன்று எப்படி பொன்விழா ஆகும். இதுகூட தெரியாமல் அவர் ஜெயலலிதா நினைவிடம் சென்றது வியப்பாக இருக்கிறது.

அ.தி.மு.க. கட்சி கொடியை சசிகலா பயன்படுத்த உரிமை கிடையாது. அதை அவர் மீறி வருகிறார். இதற்கு நாங்கள் பலமுறை கண்டனம் தெரிவித்து விட்டோம்.

வேண்டும் என்றே கட்சி கொடியை பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்துகிறார். இதை நாங்கள் தடுக்க முடியும். ஆனால் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

அதை நாங்கள் தடுத்தால் சசிகலா பெரிய தலைவர் போன்ற மாயை உருவாகும். ஈரை பேனாக்கி பேனை பெருமாள் ஆக்கும் வேலையை நாங்கள் நிச்சயம் செய்ய மாட்டோம்.

ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா சென்று இருப்பதை யாரும் வரலாற்று நிகழ்வாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவரை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். சசிகலா நடிப்புக்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம்.

அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு எந்த காலத்திலும் இடம் இல்லை. டி.டி.வி.தினகரன் வேண்டுமானால் அவருக்கு அ.ம.மு.க.வில் நல்ல இடம் கொடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!