ராம்நாத் கோவிந்த் உரையின்பொழுது தொடர்ந்து பேசியபடியே இருந்த ராகுல் காந்தி…!


குடியரசு தலைவர் உரையின்பொழுது முதல் வரிசையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி தனது கட்சி தலைவர்களிடம் பேசியபடி இருந்துள்ளார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

இந்த கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் நாடாளுமன்ற விவகார துறை மந்திரி அனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவும் கலந்து கொண்டார்.

குடியரசு தலைவராக பொறுப்பேற்று கொண்டபின் முதன்முறையாக கூட்ட தொடரில் கலந்து கொண்டார் ராம்நாத் கோவிந்த். அவரை பிரதமர் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பின்னர் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் இன்று உரையாற்றினார்.

அவர், பொருளாதார மற்றும் சமூக ஜனநாயகம் இன்றி அரசியல் ஜனநாயகம் நிலைபெறாது என பாபா சாகேப் அம்பேத்கார் கூறுவது வழக்கம் என கூறி தனது உரையை தொடங்கினார்.

குடியரசு தலைவர் வருவதற்கு 2 நிமிடங்களுக்கு முன் நாடாளுமன்ற மைய மண்டபத்திற்கு வந்து சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரான ராகுல் காந்திக்கு முதல் வரிசை ஒதுக்கப்பட்டு இருந்தது.

குடியரசு தலைவர் உரையின்பொழுது, ராகுல் காந்தி தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களுடன் பேசியபடியே இருந்துள்ளார். அவரது உரையின்பொழுது கை தட்டல்கள் எழுந்த பொழுதும் ராகுல் காந்தி அதில் கலந்து கொள்ளவில்லை.

குடியரசு தலைவர் உரை முடிந்தபின் சோனியா காந்தி தனது மேஜையில் தட்டிய நிலையிலும் எதிலும் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி, உரை முடிந்து குடியரசு தலைவர் செல்வதற்கு முன் எழுந்து சென்றார். அவரை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சூழ்ந்து கொண்டனர். இதனை தொடர்ந்து அவர்களுடன் ராகுல் பேச தொடங்கி விட்டார். – Source: dailythanthi.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!