மதுரையில் சோப்பு கம்பெனி அதிபர், மனைவியுடன் உடல் கருகி மரணம்!

தூங்கி கொண்டிருந்தபோது ஏ.சி. வெடித்ததால் ஏற்பட்ட தீயில் கருகி கணவன்- மனைவி பலியான சம்பவத்தில் வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை ஆனையூர் எஸ்.வி.பி. நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சக்தி கண்ணன் (வயது 43). இவரது மனைவி சுபா (37). இவர்களுக்கு காவியா (17) என்ற மகளும், கார்த்திகேயன் (14) என்ற மகனும் உள்ளனர்.

விருதுநகர் தனியார் கல்லூரியில் காவியா முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மதுரை காளவாசலில் உள்ள தனியார் பள்ளியில் கார்த்திகேயன் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சக்தி கண்ணனுக்கு சொந்த ஊர் விருதுநகர். இவர் மதுரையில் ஆர்கானிக் சோப்பு தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

எஸ்.வி.பி. நகரில் மாடியுடன் கூடிய வாடகை வீட்டில் சக்திகண்ணன் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

வழக்கம்போல் சக்திகண்ணன் தனது மனைவி மற்றும் மகள், மகனுடன் மாடியில் உள்ள ஏ.சி. அறையில் தூங்குவது வழக்கம்.

அதன்படி 4 பேரும் நேற்று இரவு அந்த அறையில் தூங்கினர். நள்ளிரவில் மழை பெய்ததால் குளிர் அதிகமானது. இதனால் காவியா, கார்த்திகேயன் ஆகியோர் வீட்டின் கீழ் அறைக்கு சென்று தூங்கியதாக தெரிகிறது.

கணவன்-மனைவி மட்டும் ஏ.சி. அறையில் தூங்கினர். இன்று அதிகாலை 3 மணி அளவில் ஏ.சி.யில் திடீர் மின்கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதன் காரணமாக ஏ.சி.யில் இருந்து குபுகுபுவென புகை வெளிவர தொடங்கியது. இதனால் சக்தி கண்ணன் தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்தார். அப்போது அறை முழுவதும் புகை மண்டலமாக இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் அவசரம் அவசரமாக மனைவியை எழுப்பினார். அதற்குள் அறை முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது. எனவே சக்திகண்ணன்-சுபா தம்பதியர் நெருப்பை அணைப்பதற்காக பாத்ரூமில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி உள்ளனர்.

அப்போது ஏ.சி. திடீரென வெடித்துச் சிதறியது. அத்துடன் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த அறையில் இருந்த மின் வயர்களும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் மூச்சு திணறி சுபா மயங்கி கீழே விழுந்தார். அறை முழுவதும் புகை இருந்ததால் மனைவி மயங்கி விழுந்ததை கூட அறியாத அவர் மீண்டும் தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக இருந்தார். ஆனாலும் தீ கட்டுக்குள் அடங்கவில்லை. புகையும் அறை முழுவதும் அதிகமாக சூழ்ந்தது.

சக்தி கண்ணன் மனைவியை தூக்கிக் கொண்டு அறையில் இருந்து வெளியே வர முயன்றார். அப்போது கதவு எங்கே உள்ளது? என்று தெரியாத அளவுக்கு புகை இருந்தது. கதவையும் திறக்க முடியவில்லை. எனவே சக்தி கண்ணன் மூச்சு திணறிய நிலையில் மனைவியுடன் மயங்கிக் கீழே விழுந்தார்.

இதனிடையே தீ அறை முழுவதும் வேகமாக பரவியது. மயங்கிய நிலையிலேயே சக்தி கண்ணன்- சுபா ஆகிய 2 பேரும் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர்.

முதல் மாடியில் இருந்து கரும்புகை வெளிவருவதை கண்ட அக்கம் பக்கத்தினர், சக்தி கண்ணன் வீட்டின் முன்பு திரண்டனர். சத்தம் கேட்டு கீழ் அறையில் தூங்கி கொண்டிருந்த மகள் காவியா, மகன் கார்த்திகேயன் ஆகியோர் எழுந்தனர். அப்போதுதான் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது

இதையடுத்து 2 பேரும் பதறியடித்துக்கொண்டு முதல் மாடிக்கு சென்றனர். அங்கு வீட்டுக்குள் செல்ல முடியாத அளவு புகை மண்டலம் சூழ்ந்து இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன் தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து தல்லாகுளம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத் துக்கு விரைந்து வந்தனர். அங்கு அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

பின்னர் மீட்பு படையினர் படுக்கை அறைக்குள் கருகிய நிலையில் இறந்து கிடந்த சக்தி கண்ணன், சுபா ஆகிய இருவரது உடல்களையும் மீட்டு வெளியே எடுத்து வந்தனர்.

தாய்-தந்தை உடல்களை பார்த்த குழந்தைகள் காவியா, கார்த்திகேயன் ஆகிய இருவரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்த காட்சி காண்போர் அனைவரையும் கண் கலங்க வைத்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனைக்காக கணவன்-மனைவி 2 பேரின் உடல்களும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

ஆனாலும் கணவன்- மனைவி தீயில் கருகி பலியான சம்பவத்தில் வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் ஆனையூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!