எ கொயட் பிளேஸ் 2 திரைவிமர்சனம்!

நடிகர் நடிகர் இல்லை
நடிகை எமிலி பிளண்ட்
இயக்குனர் ஜான் கிராசின்ஸ்கி
இசை மார்கோ பெல்ட்ராமி
ஓளிப்பதிவு போலி மோர்கன்


எ கொயட் பிளேஸ் முதல் பாகத்தில் ஏலியன்கள் உலகத்திற்கு வந்து மக்களை அழிக்கிறார்கள். இதில் தப்பிக்கும் ஒரு குடும்பம் எலியன்களிடம் இருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொண்டு ஏலியன்களை அழிக்கிறார்கள் என்பதை கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.

ஊரை அழித்து இருக்கும் ஏலியன்களுக்கு கண் தெரியாது. சத்தம் கேட்டால் அங்கு வந்து மனிதர்களை தாக்கும். இந்த ஏலியன்களிடம் இருந்து தனது குழந்தைகளையும் தன்னையும் காப்பாற்றிக் கொள்ள நாயகி எமிலி பிளண்ட் மக்கள் வசிக்கும் ஊருக்கு செல்ல வேண்டும் என திட்டமிடுகிறார். இவருடன் இருக்கும் மில்லிசென்ட் சிம்மண்ட்ஸ், ரேடார் கருவி மூலம் மக்கள் வசிக்கும் ஊரை கண்டுபிடிக்கிறார்.

இறுதியில், நாயகி எமிலி பிளண்ட் குடும்பம் ஏலியன்களிடம் இருந்து தப்பித்து மக்கள் வசிக்கும் ஊருக்கு சென்றார்களா? ஏலியன்களை கொன்றார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகியாக நடித்திருக்கும் எமிலி பிளண்ட், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சின்ன சின்ன அசைவுகளில் கூட நடிப்பு திறனை காட்டி இருக்கிறார். குழந்தைகளை காப்பாற்ற போராடும் போது பார்ப்பவர்களை பரிதாபப்பட வைத்திருக்கிறார். சிறுமியாக வரும் மில்லிசென்ட் சிம்மண்ட்ஸ் காதுகேளாத மற்றும் வாய் பேசமுடியாத கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். துணிச்சலாக இவர் எடுக்கும் முடிவு மெய் சிலிர்க்க வைக்கிறது.

சிறுவனாக வரும் நோவா ஜூப் நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். காலில் அடிபட்டவுடன் வலியை தாங்கமுடியாமல் தவிக்கும் காட்சியில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். சிலியன் மர்பி கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.

சைலண்ட் திரில்லர் கதையை ரசிக்கும் படி இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜான் கிராசின்ஸ்கி. படத்திற்கு பெரிய பலம் திரைக்கதை. சத்தமே இல்லாமல் நகரும் திரைக்கதை, பல இடங்களில் பார்ப்பவர்களை பயத்தில் சத்தம் போட வைத்திருக்கிறது. குறைந்த கதாபாத்திரங்களை வைத்து திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர்.

போலி மோர்கனின் ஒளிப்பதிவும், மார்கோ பெல்ட்ராமியின் இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

மொத்தத்தில் ‘எ கொயட் பிளேஸ் 2’ சைலண்ட் வெற்றி.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!