வீட்டில் பஜ்ஜி சாப்பிட்ட தாய்-மகன் சாவு!

பெலகாவியில் பஜ்ஜி சாப்பிட்ட தாய், மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெலகாவி மாவட்டம் ஹீதளி கிராமத்தை சேர்ந்தவர் பார்வதி (வயது 55). இவரது மகன் சோமலிங்கப்பா (28). இருவரும் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். இந்த நிலையில் இருவரும் நேற்று முன்தினம் தோட்டத்தில் வேலை செய்தனர்.

மாலையில் வேலையை முடித்துக்கொண்டு இருவரும் வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர், பார்வதி பஜ்ஜி செய்துள்ளார். அதை தாய், மகன் இருவரும் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பெலகாவி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

ஆனால், ஆஸ்பத்திரிக்கு போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து மரியாளா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஜ்ஜி சாப்பிட்ட தாய்-மகன் பலியான சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு பிறகே அவா்களது சாவுக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!