சின்னஞ்சிறு கிளியே திரைவிமர்சனம்!

நடிகர் செந்தில் நாதன்
நடிகை அர்ச்சனா சிங்
இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன்
இசை மஸ்தான் காதர்
ஓளிப்பதிவு பாண்டியன் கருப்பன்


நாயகன் செந்தில்நாதன் கிராமத்தில் இயற்கை உணவகம் நடத்தி வருகிறார். இவர் ஆங்கில மருத்துவம் மீது அதிக நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார். அதே ஊரில் வசிக்கும் சாண்ட்ரா நாயரை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார் செந்தில்நாதன். பிரசவத்தின் போது, ஆங்கில மருத்துவத்தால் சாண்ட்ரா இறந்துவிடுகிறார்.

தனக்கு பிறந்த பெண் குழந்தையை அதிக பாசத்துடன் வளர்த்து வருகிறார் செந்தில்நாதன். 6 வயதில் இருக்கும் போது, செந்தில்நாதனின் மகள் மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார். இறுதியில், செந்தில்நாதனின் மகளை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? மகளை செந்தில்நாதன் கண்டுபித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் செந்தில்நாதன், ஒரு சில இடங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். பல இடங்களில் நடிக்க முயற்சி செய்து இருக்கிறார். நாயகியாக வரும் சாண்ட்ரா நாயர் அழகாக சிரித்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் அர்ச்சனா சிங் நடிப்பில் பளிச்சிடுகிறார். குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் பதிவத்தினி, நடிப்பில் கவர்ந்திருக்கிறார். தந்தையை செல்லமாக மிரட்டுவது, பாசம், அக்கறை என நெகிழ வைத்திருக்கிறார். பாலாஜி சண்முகசுந்தரம், குள்ளபுலி லீலா, செல்லதுரை, விக்ரமாதித்யன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

கிராமத்து பின்னணியில் அப்பா மகள் பாசம், இயற்கை மருத்துவத்தின் மகிமை, காதல், மெடிக்கல் கிரைம் என கலந்துக் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன். முதல்பாதி திரைக்கதை, எதை நோக்கி செல்கிறது என்று தெரியாமல் இருக்கிறது. இரண்டாம்பாதி மெடிக்கல் கிரைம் பற்றி தெளிவாக சொல்லி இருக்கிறார். கதையில் இருக்கும் வலு, திரைக்கதையிலும், கதாபாத்திரங்களின் நடிப்பிலும் அதிகம் இல்லை. இப்படம் பல விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை குவித்துள்ளது. பல விருது படங்கள் ஆவணப் படங்கள் போல் இருக்கும். ஆனால், இப்படம் அதுபோல் இல்லாமல் இருப்பது சிறப்பு.

மஸ்தான் காதரின் இசையில் 2 பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கவனிக்க வைத்திருக்கிறார். பாண்டியன் கருப்பனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில் ‘சின்னஞ்சிறு கிளியே’ ரசிக்கலாம்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!