மாத சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்!

ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை முறையாக கடைபிடித்து வந்தால் சங்கடங்கள் யாவும் மாயமாய் மறையும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை.

முழுமுதற் கடவுளாக இருக்கும் பிள்ளையார் வணங்குவதற்கு மிகவும் எளிமையானவர். மிகவும் எளிமையான கடவுளாக விளங்கும் விநாயகப் பெருமானுக்கு உகந்த திதி சதுர்த்தி. பவுர்ணமி முடிந்து வரும் நான்காம் நாளில் ஆரம்பிப்பது சதுர்த்தி திதி ஆகும். சதுர்த்தி திதி தினத்தில் அந்தி சாயும் நேரத்தில் விநாயகருக்கு வழிபாடு செய்வது உகந்ததாகும்.

மாலையும், இரவும் கூடும் சாயங்கால நேரத்தில் விநாயகர் கோவிலுக்கு சென்று அவரை தரிசனம் செய்து வருபவர்களுக்கு வேண்டிய வரமெல்லாம் அப்படியே கிடைக்கும் என்பது ஐதீகம்.

சந்திர பகவான் தன் தலை கனத்தால் விநாயகரை கேலி செய்து சிரித்தார். அதனால் தன் அழகை இழந்து போகும் படி சாபம் பெற்றார். பின்னர் சந்திரன் விநாயகருக்கு கடும் தவம் மேற்கொண்டு விரதம் இருந்தது சதுர்த்தி திதியில் தான். சந்திர பலம் பெற, விநாயகர் அருள் பெற சதுர்த்தி விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வரலாம். குடும்ப பிரச்சினைகள், தொழில் பிரச்சனைகள், வழக்கு தொடர்பான விஷயங்களில் பிரச்சனைகள் இருத்தல், கணவன்-மனைவிக்குள் பிரிவு, வருமானக் குறைவு, வேலையின்மை, பிள்ளைப் பேறு உண்டாக, பகைவர்கள் தொல்லை ஒழிய, அழகிய தோற்றம் பெற சதுர்த்தி விரதத்தை தவறாமல் கடைப்பிடித்து வருவது சிறந்த பலன்களை கொடுக்கும்.

முதன் முதலாக சதுர்த்தி விரதத்தை கடைபிடிக்க நினைப்பவர்கள் ஆவணியில் வரும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி விட்டு அதன் பிறகு சுக்லபட்ச சதுர்த்தி விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகு வரும் ஒவ்வொரு மாத சதுர்த்தி நாட்களில் விரதம் இருந்து வழிபட்டு வந்தால் கேட்டதெல்லாம் கிடைக்கும். அன்றைய நாள் அதிகாலையில் எழுந்து நீராடி பிள்ளையார் கோவிலுக்கு சென்று 11 முறை வலம் வர வேண்டும். அதன் பின்பு பிள்ளையாருக்கு அருகம்புல் சாற்றி, தேங்காய் உடைத்து, அர்ச்சனை செய்து வழிபட்டு வரலாம்.

சதுர்த்தி விரதம் மேற்கொள்பவர்கள் பித்ரு தோஷத்தில் இருந்து நீங்க அன்றைய நாளில் கோவிலுக்கு சென்று வந்ததும் ஒரு ஆழாக்கு பச்சரிசியில், வெல்லம் கலந்து, வாழைப் பழத்தை துண்டு துண்டாக நறுக்கி அதனுடன் சேர்த்து உருண்டைகளாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனை உங்கள் அருகில் இருக்கும் பசுவிற்கு தானம் கொடுக்க வேண்டும். உங்கள் கைகளால் இவ்வாறு 11 சதுர்த்தி செய்து வர பித்ரு தோஷம் விலகி நிறைய நன்மைகள் உண்டாகும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!