தமிழர்களுடன் சமரச பேச்சுக்கு தயார்- கோத்தபய ராஜபக்சே அதிரடி அறிவிப்பு!

சிங்கள பெரும்பான்மை மக்களால்தான் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன், அவர்களின் நலன்களுக்காகத்தான் உழைப்பேன் என்று தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற போது கோத்தபய ராஜபக்சே கூறியது நினைவுகூரத்தக்கது.

இலங்கையில் தமிழ் ஈழம் கோரிய விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே 1983-ம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியது. 2009-ம் ஆண்டு இந்த போர் முடிவுக்கு வந்தது.

இந்த போரின் இறுதிக்கட்டத்தில் அப்பாவி தமிழர்கள் கொத்துக்கொத்தாக சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இப்படி இனப்படுகொலை செய்யப்பட்டனர். மனித உரிமைகள் மீறப்பட்டன. போர்க்குற்றங்கள் சர்வசாதாரணமாக அரங்கேறின. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல்போனார்கள். இதையெல்லாம் இலங்கை அரசு மறுத்தது.

இலங்கையில் இன்னும் தமிழர்கள் மூன்றாம் தர குடிமக்களாக அல்லாடுகிற அவலம் தொடர்கதையாய் நீளுகிறது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாத சோகம் நீடிக்கிறது.

இலங்கையில் நடத்தப்பட்ட அட்டூழியங்கள் தொடர்பாக ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில், ஒரு விசாரணை நடத்துகிறது.

போரின் இறுதிக்கட்டத்தில் சிங்கள ராணுவம் நடத்திய அட்டூழியங்கள் தொடர்பாக 1 லட்சத்து 20 ஆயிரம் ஆதாரங்கள் இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கடந்த வாரம் அறிவித்தது.

இந்த நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுள்ள அவர் அங்கு ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெசை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் கோத்தபய ராஜபக்சே கூறியதாவது:-

ஆன்டனியோ குட்டரெஸ்

இலங்கை உள்நாட்டு பிரச்சினையில் தீர்வு காண்பதற்காக இடம்பெயர்ந்த தமிழர்களுடன் சமரச பேச்சு நடத்த தயார். பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் அழைக்கப்படுவார்கள்.

விடுதலைப்புலிகள் அமைப்புடன் நீண்ட காலம் தொடர்பில் இருந்து, அதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கு பொதுமன்னிப்பு அளிப்பதில் தயக்கம் காட்ட மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தகவல்கள் கொழும்புவில் உள்ள இலங்கை அதிபர் மாளிகை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சிங்கள பெரும்பான்மை மக்களால்தான் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன், அவர்களின் நலன்களுக்காகத்தான் உழைப்பேன் என்று தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற போது கோத்தபய ராஜபக்சே கூறியது நினைவுகூரத்தக்கது.

அப்படிப்பட்ட கோத்தபய ராஜபக்சே, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை அரசுக்கு எதிரான பிடி இறுகிய நிலையில், இந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். இதுவரை தமிழ் இனக்குழுக்களுடன் பேச்சு வார்த்தைக்கு முன்வராத அவர், இப்போது பேச்சு வார்த்தை நடத்த முன் வந்திருக்கிறார்.

இதை அவர் எந்த அளவுக்கு நிறைவேற்றுவார் என்பதுதான் இடம் பெயர்ந்த தமிழர்களின் கேள்வியாக அமைந்துள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!