ஒருபோதும் மண்டியிட மாட்டேன்.. என் தலையில் 2 முறை சுடுங்கள்.. ஆப்கான் சாலே பரபர அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சாலே மக்களுக்கு எழுதி இருக்கும் உருக்கமான கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தாலிபானிடம் ஒருபோதும் அடிபணிய மாட்டேன் என்று இவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறி ஒரு வாரம் ஆகிவிட்டது. இந்த நிலையில் அங்கு தாலிபான்கள் விரைவில் ஆட்சி அமைக்க உள்ளது. அங்கு தாலிபான்களுக்கு எதிராக நார்தன் அலயன்ஸ் குழுவை சேர்ந்த கொரில்லா போராளிகள் கடுமையாக போராடி வருகிறார்கள். தாலிபான் ஆட்சிக்கு எதிராக இவர்கள் போராடி வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சாலே பஞ்சசீர் மலை பகுதியில்தான் போராடி வருகிறார். நார்தன் அலயன்ஸ் குழுவின் தலைவர் அஹமது மசூத்துடன் இணைந்து தாலிபானை இவர் எதிர்த்து வருகிறார். அம்ருல்லா சாலேவின் வீடு நேற்று முதல்நாள் குண்டு வீசி தகர்க்கப்பட்டது. இந்த நிலையில் பஞ்சசீர் மலை பகுதியிலேயே சாலே தற்போது தலைமறைவாகிவிட்டார். இவரின் இருப்பிடம் எங்கே என்று தெரியாத நிலையில் டெய்லி மெயில் ஊடகத்திற்கு இவர் எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாலிபான்கள்

அவர் எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், தாலிபான்கள் காபூலை பிடிக்கும் முன்பே காபூல் சிறைச்சாலைகளில் தாலிபான்கள் ஆட்டம் தொடங்கிவிட்டது. ஜெயிலில் இருந்து தப்பிக்க தாலிபான் கைதிகள் பலர் முயன்றனர். இதையடுத்து தாலிபான் படையை சேராத மற்ற கைதிகளை வைத்து சிறைக்குள் இருந்த தாலிபான்களை சமாளித்தோம். இதனால் அங்கே பெரிய மோதலே ஏற்பட்டது. என்னுடன் வேலை பார்த்த பல அமைச்சர்கள், மூத்த அதிகாரிகளை காணவில்லை. அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை.

போலீஸ்

சில அதிகாரிகள் மட்டுமே காபூல் வீழ்ந்த பின் என்னுடைய இருப்பிடம் கண்டுபிடித்து வந்து பேசினார்கள். காபூலை காப்பாற்ற முடியாமல் போனதற்கு என்னிடம் மன்னிப்பு கேட்டனர். போதுமான படைகளை தேவைப்பட்ட நேரத்தில் எங்களால் களமிறக்க முடியாமல் போனதுதான் தோல்விக்கு காரணம். ஆப்கானிஸ்தானின் போலீஸ் தலைவருக்கு நான் போன் செய்து பேசினேன்.

வீரமான நபர்

அவர் மிகவும் தைரியமான மனிதர். அவர் உலகில் எங்கே இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும். பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவரிடம் குறிப்பிட்டேன். கடைசி காலத்தில் அவர்தான் என்னுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். ஆப்கான் படைகள் வீழ்ந்த போது கூட போலீசார் அங்கு பல இடங்களில் தாலிபான்களுக்கு எதிராக நெஞ்சை நிமிர்த்தி நின்றனர்.

படைகள் வரவில்லை
போலீசாருக்கு உதவும் வகையில் படைகளை அனுப்ப திட்டமிட்டேன். இதற்காக தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு உத்தரவிட்டேன். ஆனால் அவர்களிடம் இருந்து எனக்கு எந்த பதிலும் வரவில்லை. போலீசாருக்கு உதவும் வகையில் எங்கும் ராணுவ படைகள் அனுப்பி வைக்கப்படவில்லை. நான் கடைசி வரை போராட வேண்டும் என்ற மனநிலையில்தான் இருந்தேன்.

தலைவர்கள் ஏமாற்றம்

சில அரசியல் தலைவர்கள் எங்களை ஏமாற்றிவிட்டனர். எங்கள் முதுகில் அரசியல்வாதிகள் குத்திவிட்டனர். அவர்கள் வெளிநாடுகளில் பாதுகாப்பாக தங்கிக்கொண்டு ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஏழை மக்களை தாலிபான்களுக்கு எதிராக போராட சொல்கிறார்கள். ஒரு தலைவர் என்பவர் நாட்டிற்காக தனது உயிரையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும். நாம் தியாகிகளாக இருக்க வேண்டும். நாம் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்க வேண்டும்.

தலைவர் தயார்

தலைவன் என்பவன் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.எனக்கு அரசு தரப்பில் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. அப்போதுதான் நான் அஹமது மசூத்திற்கு போன் செய்தேன்.. அவரிடம் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் என்னை உடனே பஞ்சசீர் வரும்படி கூறினார். நான் காபூலை விட்டு செல்லும் முன் என் வீட்டிற்கு சென்றேன். அங்கு இருந்த என் மனைவி குழந்தைகள் புகைப்படங்களை உடைத்து எறிந்தேன்.

ரஹீம்

என்னுடைய பாதுகாவலர் ரஹீமை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டேன். அவரிடம் வீட்டை விட்டு புறப்படும் முன் குரானை கொடுத்து சத்தியம் ஒன்றும் வாங்கினேன். ரஹீம்.. நான் ஒரு போதும் தாலிபான்களிடம் அடிபணிய மாட்டேன். நாம் பஞ்சசீர் செல்கிறோம். வழியில் தாலிபான்களை கடந்தே செல்ல வேண்டும். தாலிபான்களை நாம் எதிர்ப்போம். ஆனால் என்னை தாலிபான் கைது செய்தாலோ, எனக்கு காயம் பட்டாலோ ஒரே ஒரு கோரிக்கைதான் வைக்கிறேன் உனக்கு.. என்னை தலையில் இரண்டு முறை சுட்டுவிடு. அடிமையாக வாழ்வதற்கு.. வீரமாக இறப்பதே மேல்.. என்னை சுட்டுவிடு.. குரானில் சத்தியம் செய் என்று என் காவலரிடம் கூறினேன், என்று சாலே தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

சாலே கடிதம்

சாலே எழுதிய இந்த கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு தலைவனாக, போராளியாக இந்த கடிதம் மூலம் சாலே தன்னை முன்னிறுத்தி இருக்கிறார். சாலே தற்போது பஞ்சசீர் மலை பகுதியில் பதுங்கி இருக்கிறார். அங்கு தாலிபான்களுக்கும் புரட்சி படைகளுக்கும் இடையில் கடும் மோதல் நிலவி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் சாலேவின் இந்த வீரமான கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் மக்கள் இடையே சாலேவின் இந்த கடிதம் புதிய எழுச்சியையும், உருக்கமான மனநிலையையும் ஏற்படுத்தி உள்ளது.-source: oneindia * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!