பிறந்த ஒரு மாதமேயான பெண் குழந்தைக்கு நிகழ்ந்த விபரீதம்…!


பொள்ளாச்சியில் ரூ. 1¼ லட்சத்துக்கு விற்கப்பட்ட பெண் குழந்தை ஈரோட்டில் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பாட்டி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் குனிச்சேரியை சேர்ந்தவர் ராஜன். தேங்காய் பறிக்கும் கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிந்து.

இவர்களுக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பிந்துவுக்கு பாலக்காடு அரசு ஆஸ்பத்திரியில் கடந்த டிசம்பர் 25-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. 29-ந் தேதி பிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வறுமை காரணமாக குழந்தையை வளர்க்க முடியாது.

அதனை விற்று விடலாம் என முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் பொள்ளாச்சி வந்தனர். அங்கு ராஜன், அவரது தாய் பிஜி, ராஜன் மனைவி பிந்து ஆகியோர் சேர்ந்து பெண் குழந்தையை ஈரோட்டை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரிடம் ரூ. 1 லட்சத்து 25 ஆயிரத்துக்கு விற்றனர்.

இந்த தகவல் அறிந்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு (சூமோட்டோ) பதிவு செய்தது. பின்னர் இந்த சம்பவம் பற்றி 6 வாரங்களுக்குள் விரிவான விளக்கம் அளிக்கும் படி தமிழக, கேரள மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் டி.ஜி.பி.க்கள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இதே போல் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சக செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. குழந்தை விற்பனை செய்யப்பட்டது குறித்து ஆலத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனை அறிந்த கணவன்-மனைவி மற்றும் பாட்டி ஆகியோர் தலைமறைவானார்கள்.

அவர்களை போலீசார் தேடி வந்தனர். முதலில் குழந்தையின் தாய் பிந்து கைது செய்யப்பட்டார். அவரது கணவர் ராஜன், மாமியார் பிஜி, குழந்தையை விற்பனை செய்ய உதவி செய்த ராஜன் தங்கை ஜானகி, குழந்தையை வாங்கிய ஜனார்த்தனன் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் பிஜி, குழந்தையை வாங்கிய ஜனார்த்தனன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரித்த போது குழந்தை ஈரோட்டில் இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார் குழந்தையை மீட்டனர். தலைமறைவாக உள்ள குழந்தையின் தந்தை ராஜன், அவரது தங்கை ஜானகி ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள். – Source: maalaimalar.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!