அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க வீதியில் படுத்திருந்த விவசாயிக்கு நேர்ந்த கொடூர சம்பவம்…!


அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க ரோட்டில் படுத்திருந்த விவசாயி டிராக்டர் மோதி பலியான சம்பவம் ஆவணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தை அடுத்த பெரிய நாயகி புரத்தை சேர்ந்த அழகன் மகன் பாலகிருஷ்ணன் (வயது 32). விவசாயி. இவரது வயலில் நேற்று அறுவடை நடந்தது.

அறுவடை செய்த நெற்கதிர்களை ரோட்டின் ஓரத்தில் போட்டுவிட்டு இரவு காவலுக்காக அவர் அங்கு படுத்திருந்தார். இந்த நிலையில் நள்ளிரவு அந்த வழியாக ஒரு டிராக்டர் சென்றது. அதன் டிரைவர், பாலகிருஷ்ணன் படுத்திருப்பதை கவனிக்காமல் டிராக்டரை ஓட்டிசென்றார். இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பாலகிருஷ்ணன் உடல் நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார்.


இதனை கண்ட டிராக்டர் டிரைவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது பற்றி தெரியவந்ததும் திருச்சிற்றம்பலம் போலீசார் சம்பவ இடம் சென்று விபத்தில் பலியான பாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான பாலகிருஷ்ணனுக்கு விஜயா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

இந்த விபத்து குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பாலகிருஷ்ணன் மீது மோதிய டிராக்டர் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க ரோட்டில் படுத்திருந்த விவசாயி டிராக்டர் மோதி பலியான சம்பவம் ஆவணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. – Source: maalaimalar.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!