அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் பின்லேடனின் தொடர்பு இல்லை – தலீபான்

2001 செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் அல்கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் அல்கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 4 பயணிகள் விமானங்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு அவை உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரம், அமெரிக்க ராணுவ தலைமையிடம், வயல்வெளி ஆகிய இடங்களில் மோதச்செய்தன.

இந்த தாக்குதலில் மொத்தம் 2,996 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 2,977 பேர் பொதுமக்கள், 19 பேர் அல்-கொய்தா பயங்கரவாதிகளும் அடக்கம்.

இந்த தாக்குதலை தொடர்ந்து அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு மற்றும் அதன் தலைவன் ஒசாமா பின்லேடனை அழிக்கும் நோக்கத்தோடு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் களமிறக்கப்பட்டனர்.

நீண்ட தேடுதலுக்கு பின்னர் 2011 ஆண்டு பாகிஸ்தானில் அமெரிக்க படைகளால் பின்லேடன் கொல்லப்பட்டான். அதன்பின்னரும், தலீபான்களுடனான மோதலை தொடர்ந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டிருந்தனர்.

இதற்கிடையில், 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் அந்நாட்டை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும், ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைக்கும் நடவடிக்கையில் தலீபான்கள் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், தலீபான்களின் செய்தித்தொடர்பாளர் ஷபிகுல்லா முஜாகித் அமெரிக்க செய்திநிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய முஜாகித், அமெரிக்காவில் 2001 செப்டம்பர் 11-ம் தேதி நடைபெற்ற (9/11) தாக்குதலில் ஒசாமா பின்லேடனின் பங்கு ஒருபோதும் நிரூபிக்கப்படவில்லை. ஆகையால், அந்த ஆண்டு அமெரிக்கா தலைமையிலான படைகள் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்ததை நியாயப்படுத்தமுடியாது.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது அல்கொய்தா மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த ஆப்கானிஸ்தான் மண்ணை பயன்படுத்துவதை தலீபான்கள் அனுமதிக்கமாட்டோம்’ என்றார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!