ஜெர்மனியில் ‘பீட்சா’ விற்கும் ஆப்கான் ‘மாஜி’ அமைச்சர் – கையில் பணம் இல்லாததால் பரிதாபம்!

ஆப்கானில் தலிபான்களிடம் இருந்து தப்பித்த முன்னாள் அமைச்சர் ஒருவர், செலவுக்கு பணம் இல்லாததால் தஞ்சமடைந்த ஜெர்மனியில் ‘பீட்சா’ விற்று பிழைப்பை நடத்தி வருகிறார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர், அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனியும் அவரது அமைச்சர்கள் சிலரும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இந்த நிலையில், ஆப்கான் முன்னாள் அமைச்சர் ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தப் படம் ஜெர்மனியில் இருந்து வெளியிடப்பட்டதாக தெரியவந்துள்ளது. உண்மையில், அஷ்ரப் கனி தலைமையிலான முந்தைய ஆப்கான் அமைச்சரவையில் தகவல் தொடர்பு அமைச்சராக இருந்தவர் சையத் அகமது சாதத். இவர், தலிபான்களின் ஆக்கிரமிப்பிற்குப் பின்னர், ஆப்கானிஸ்தானை விட்டு ஜெர்மனியில் தஞ்சமடைந்துள்ளார். இவரது புகைப்படத்தை டுவிட்டரில் ‘இஏஏ நியூஸ்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், ‘ஆப்கான் முன்னாள் அமைச்சர் சையத் அகமது, ஜெர்மனியின் லீப்ஜிங் நகரில் சைக்கிளில் சென்று ‘பீட்சா’ விற்று வருகிறார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியபோது சையத் அகமது அமைச்சராக இல்லை. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே அவர் தனது தகவல் தொடர்பு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

அவர், ஆப்கானில் இருந்து தப்பி ஜெர்மனியில் தஞ்சமடைந்த பின்னர் அவர் கையில் வைத்திருந்த பணம் தீர்ந்துபோனது. அதனால், வேறு வழியின்றி பிழைப்புக்காக ‘பீட்சா’ விநியோகத்தைத் தொடங்கினார். இவ்வாறு பீட்சா விற்பதால், எனக்கு எவ்வித அவமானமும் இல்லை என்று அவர் கூறுகிறார்’ என்று தெரிவித்துள்ளது. ஆப்கான் நாட்டின் முன்னாள் அமைச்சர் ஒருவர், ஜெர்மனியில் பீட்சா விற்பனையாளராக மாறியது, சர்வதேச அளவில் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.- source: dinakaran * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!