மறக்கமாட்டோம்..வேட்டையாடுவோம்… காபூல் தாக்குதலால் பைடன் ஆவேசம்!

காபூல் குண்டுவெடிப்பு தாக்குதலை மறக்கமாட்டோம், மன்னிக்கவும்மாட்டோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் விமானம் மூலம் மீட்டு வருகிறது. சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஆப்கானியர்களையும் பல நாடுகள் மீட்டு வருகின்றன.

இந்த மீட்புப்பணிக்காக காபூல் விமான நிலையத்தை அமெரிக்க படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன. வரும் 31-ம் தேதியுடன் அமெரிக்கபடைகள் முழுவதும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற உள்ளதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் நோக்கில் நூற்றுக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே காத்துக்கிடக்கின்றனர்.

இதற்கிடையில், காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று இரவு இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 73 பேர் உயிரிழந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் நேற்று வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது, காபூல் விமான நிலைய தாக்குதலை நடத்தியவர்களுக்கும், அமெரிக்கர்களை தாக்கவேண்டும் என நினைப்பவர்களும் இதை தெரிந்துகொள்ளுங்கள்: நாங்கள் மறக்கவும்மாட்டோம், மன்னிக்கவும்மாட்டோம். உங்களை நாங்கள் வேட்டையாடி வீழ்த்துவோம்’ என்றார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!