காபூல் விமான நிலையத்திற்கு பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை!

நாட்டை விட்டு வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் காத்திருக்கின்றனர்.

காபூல் விமான நிலையத்தை விட்டு வெளியேறுமாறும் , பயணம் செய்ய வேண்டாம் என அமெரிக்கா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டுக் குடிமக்களை கேட்டுக் கொண்டு உள்ளன.

ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. அதனைத் தொடர்ந்து கடந்த 15-ந் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலீபான்கள் வசம் சென்றது.

இதையடுத்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின.

இதற்கிடையில் தலீபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்து வருகின்றனர்.

நாட்டை விட்டு வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் காத்திருக்கின்றனர்.

தலீபான்கள் காபூல் நகரத்தைக் கைப்பற்றிய பிறகு, விமான நிலையம் மட்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 5,800 வீரர்களும், இங்கிலாந்தை சேர்ந்த ஆயிரம் வீரர்களும் விமான நிலையப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காபூல் நகரம் தலீபான்களின் வசமான பிறகு 10 நாள்களில் சுமார் 82 ஆயிரம் பேர் விமானங்கள் மூலமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

காபூல் விமான நிலையத்துக்கு வெளியே காத்திருக்கும் மக்களுக்கு அமெரிக்கா நேற்று ஒரு எச்சரிக்கையை விடுத்தது. அதன்படி அபே வாயில், கிழக்கு வாயில், வடக்கு வாயில் ஆகிய பகுதிகளில் காத்திருக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து சென்றுவிடுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

முன்னதாக இதேபோன்ற ஒரு அறிவுறுத்தலை இங்கிலாந்து வெளியிட்டது. அடுத்த அறிவிப்பு வரும்வரை பாதுகாப்பான இடத்துக்கு உடனடியாகச் சென்றுவிடுமாறு அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது.ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலைமை இன்னும் நிச்சயமற்றதாகவே இருப்பதாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் கூறியது. பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும் ஆபத்து இருப்பதாகவும் அதன் எச்சரிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இதே போன்று ஆஸ்திரேலியாவும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!