நகைக்கடையில் கொள்ளை… வாடிக்கையாளருக்கு மர்மநபர்களால் நடந்த கொடூரம்..!

மைசூருவில் நகைக்கடையில் கொள்ளையடித்த 3 பேர் கும்பல், உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டனர். ஆனால் அவர் தரையில் படுத்துக்கொண்டதால் குண்டு பாய்ந்து வாடிக்கையாளர் ஒருவர் பலியானார்.

நகைக்கடையில் கொள்ளை

கர்நாடக மாநிலம் மைசூரு டவுன் வித்யாரண்யபுரம் பகுதியில் தர்மேந்திரா என்பவர் அம்ருத் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை தர்மேந்திரா நகைக்கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது நகைக்கடையில் கொள்ளையடிக்க திட்டமிட்டு மர்மநபர்கள் 3 பேர் வாடிக்கையாளர்கள் போல் வந்தனர். அவர்கள் 3 பேரும், நகைக்கடை உரிமையாளர் தர்மேந்திராவிடம் நகை டிசைன்களை எடுத்து காட்டும்படி கூறியுள்ளனர். அதன்படி தர்மேந்திராவும் நகைகளை எடுத்து காண்பித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் 3 பேரில் ஒருவன் கடையின் முன்பக்க ஷட்டரை பாதி அளவு மூடியுள்ளார். பின்னர் 3 பேரும், நகைகளை ஒரு பையில் போட்டு கொள்ளையடித்தனர். இதனை தெரிந்து கொண்ட தர்மேந்திரா திருடன்…திருடன்… என்று கத்தி கூச்சலிட்டார்.

துப்பாக்கி சூடு

இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள், தர்மேந்திராவை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்கவும், கொள்ளை முயற்சியை தடுக்கவும் தர்மேந்திரா போராடியுள்ளார். இதனால் மர்மநபர்களில் ஒருவர் தான் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியால், தர்மேந்திராவை நோக்கி சுட்டான். உடனே சுதாரித்துக்கொண்ட நகைக்கடை உரிமையாளர் தர்மேந்திரா கீழே படுத்துக்கொண்டார்.

இந்த சமயத்தில் நகைக்கடையின் கதவு பாதி அளவு மூடப்பட்டிருந்ததால் நகை வாங்குவதற்காக மைசூரு தாலுகா தடதஹள்ளி கிராமத்தை சேர்ந்த சந்துரு(வயது 23) என்பவர் கடைக்குள் வந்துள்ளார். அப்போது அவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

வாடிக்கையாளர் பலி

இதில் குண்டு பாய்ந்த சந்துரு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பயந்து போன மர்மநபர்கள் 3 பேரும் தாங்கள் கொள்ளையடித்த நகைகள் மற்றும் பணத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

முன்னதாக துப்பாக்கி சத்தம் கேட்டு அந்த நகைக்கடை முன்பு பொதுமக்கள் கூடியிருந்தனர். அவர்கள் மர்மநபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டியபடி அங்கு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வித்யாரண்யபுரம் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் சுட்டுக்கொல்லப்பட்ட சந்துருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வலைவீச்சு

போலீஸ் விசாரணையில், கொள்ளையடிக்க வந்த மர்மநபர்கள், நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட முயன்றபோது நகைக்கடைக்கு வந்த சந்துரு மீது குண்டு பாய்ந்து உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
மேலும் சந்துரு உயிரிழந்ததாலும், அந்தப் பகுதி மக்கள் துப்பாக்கி சத்தம் கேட்டு வந்ததாலும் மர்மநபர்கள் தங்கள் கையில் கிடைத்த தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்று விட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் கொள்ளை போன நகைகள் மற்றும் பணத்தின் மதிப்பு உடனடியாக தெரியவில்லை.

இந்தியில் பேசிய மர்மநபர்கள்

சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த கைரேகைகளை போலீசார் பதிவு செய்துகொண்டனர்.

மேலும் கடையில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 3 மர்மநபர்கள் வாடிக்கையாளர் போல் வந்து கொள்ளையடித்த காட்சிகள் பதிவாகி உள்ளது.

இதுகுறித்து வித்யாரண்யபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் மர்மநபர்கள் 3 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள். மர்மநபர்கள் இந்தியில் பேசியதாகவும் கூறப்படுகிறது. மைசூருவில் சினிமா காட்சிபோல் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!