ஹெலிகாப்டரில் மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிச்சென்ற அதிபர்!

ஆப்கானிஸ்தான் அரசின் வீழ்ச்சிக்கான காரணத்தை, அஷ்ரப் கனி தப்பிச்சென்ற விதத்தை வைத்தே முடிவு செய்து விடலாம் என செய்தி நிறுவனம் குறிப்பிட்டு இருக்கிறது.

ஆப்கானிஸ்தானை தலீபான் பயங்கரவாதிகள் முழுமையாக தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் தலைநகர் காபூலை கைப்பற்றிய அவர்கள், அதிபர் மாளிகைக்குள்ளும் புகுந்தனர். இதைத்தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் அண்டை நாடான தஜிகிஸ்தானில் தஞ்சம் புகுந்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிச்சென்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது தப்பி செல்வதற்காக விமானப்படை தளத்துக்கு 4 கார்கள் நிறைய பணத்துடன் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் தப்பி சென்றார்.

4 கார்களில் கொண்டு வரப்பட்ட பணத்தை ஹெலிகாப்டரில் திணித்தனர். ஆனால் ஒரு அளவுக்கு மேல் அவர்களால் பணத்தை ஹெலிகாப்டருக்குள் ஏற்ற முடியவில்லை. எனவே கொஞ்சம் பணக்கட்டுகளை ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டிருந்த ஓடு தளத்திலேயே வீசிவிட்டு அஷ்ரப் கனி தப்பி சென்றுள்ளார். இந்த தகவலை காபூலில் உள்ள ரஷிய தூதரகம் தெரிவித்ததாக அந்த நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டு இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அரசின் வீழ்ச்சிக்கான காரணத்தை, அஷ்ரப் கனி தப்பிச்சென்ற விதத்தை வைத்தே முடிவு செய்து விடலாம் என அந்த செய்தி நிறுவனம் மேலும் குறிப்பிட்டு இருக்கிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!