ஆடி மாத தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்!

சிறப்பு மிக்க மாதத்தில் வருகின்ற ஒரு அற்புதமான நாள் தான் ஆடி சங்கடஹர சதுர்த்தி தினம். அந்த தினத்தன்று விநாயகப் பெருமானுக்கு கடைபிடிக்க வேண்டிய விரத முறைகளும், அதனால் உண்டாகும் பலன்கள் குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.


ஆடி மாதம் என்றாலே கோயில் திருவிழாக்கள், தெய்வங்களுக்கான சிறப்பு வழிபாடுகள், அன்னதானங்கள் போன்றவை நடைபெறும் ஒரு மாதமாக இருக்கிறது. இந்த ஆடி மாதத்தில் பௌர்ணமி தினத்திற்கு நான்காவது தினம் அல்லது திதியாக வரும் நாளாக ஆடி தேய்பிறை சதுர்த்தி அல்லது மாத சங்கடஹர சதுர்த்தி தினம் எனப்படுகிறது. விநாயகர் வழிபாடு மற்றும் விரதத்திற்குரிய மிக சிறந்த தினம் இந்த ஆடி சங்கடஹர சதுர்த்தி. அதிலும் சனிக்கிழமை அன்று இந்த சங்கடஹர சதுர்த்தி தினம் வருவது மிகவும் சிறப்பானதாகும்

ஆடி சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, காலை முதல் மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் உப்பு சேர்க்காத உணவு அல்லது பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயில், சந்நிதிக்கு சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகதிற்கு பசும் பால் மற்றும் வாசமிக்க மலர்கள், மஞ்சள், விபூதி போன்ற அபிஷேக பொருட்களை தந்து, அபிஷேக பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடித்து ஆலயத்தை எட்டு முறை வலம் வந்து வணங்க வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து விநாயகரை வணங்கி பூஜையறையில் நைவேத்தியம் வைக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டு விரதத்தை முடித்து கொள்ளலாம்.

ஆடி மாத சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் காரிய தடை, தாமதங்கள் போன்றவை நீங்கும். புதிதாக மேற்கொள்கின்ற முயற்சிகள் அனைத்திலும் வெற்றியும், நீங்கள் விரும்பிய பலன்களும் உண்டாகும். பெண்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் இனிதே நடைபெறும். குழந்தைகள் கல்வியில் சிறப்பான தேர்ச்சி மற்றும் வெற்றியும் பெறுவார்கள். நீண்டகாலமாக வேலை தேடி அலைந்தவர்கள் சீக்கிரத்தில் நல்ல வேலை கிடைக்கப் பெறுவார்கள்.

பணியில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் எதிர்பார்த்த இடங்களுக்கு பணியிட மாற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருமானம் பெருகும். சனிக்கிழமை வருகின்ற ஆடி சங்கடஹர சதுர்த்தி என்பதால் அன்றைய தினத்தில் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு சனி கிரக தோஷங்களின் கடுமைதன்மை குறைந்து, நற்பலன்கள் அதிகம் ஏற்பட வழிவகை செய்யும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!