வாழ்நாளில் நற்பலன்களை பெற கடக ராசியினர் செய்ய வேண்டிய பரிகாரங்கள்!



ஒவ்வொருவரும் அவர்கள் பிறக்கின்ற நேரத்தில் அன்றைய நாள், நேரம், அன்றைய தினத்தில் கிரகங்களின் நிலை ஆகியவற்றை கொண்டு ஒரு மனிதனின் ராசி கணிக்கப்படுகிறது. அந்த வகையில் 12 ராசிகளில் நான்காவதாக வரும் ராசி “கடகம்” ஆகும். இந்த கடக ராசியில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் நற்பலன்களை பெறுவதற்கு என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.

“கடகம்” என்ற வார்த்தை “கர்க்கடகம்” எனப்படும் சமஸ்கிருத வார்த்தையில் இருந்து உருவான ஒன்றாகும். இந்த வார்த்தையின் பொருள் “நண்டு” ஆகும். நண்டு பொதுவாக நீரில் வசிக்கும் ஓரு உயிரனமாகும். பஞ்சபூதத்தில் நீரை ஆளும் கிரகமாக “சந்திர பகவான்” இருக்கிறார். எனவே சந்திர பகவானின் “சொந்த” ராசியாக கடக ராசி இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. சந்திர பகவானை மனோகாரகன் என்றும் கூறுவர். ஒரு மனிதனின் மனதிற்கு காரகனாக சந்திர பகவான் இருக்கிறார். கடக ராசியினர் தங்கள் வாழ்வில் நற்பலன்களையும், அதிர்ஷ்டங்களையும் பெறுவதற்கு கீழ்கண்ட பரிகாரங்களை செய்து வருவது நன்மை பயக்கும்.

கடக ராசிக்குரிய நவகிரக நாயகன் சந்திர பகவான் ஆவார். எனவே கடக ராசியினர் தங்கள் ராசிக்குரிய திங்கட்கிழமைகளில் சிவபெருமான் கோயிலில், சிவனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டு வருவது அவர்களின் கிரக தோஷங்கள், கர்ம தோஷங்கள் போன்றவற்றை நீக்கும். பௌர்ணமி தினங்களில் முன்னிரவு நேரத்தில் வானில் தோன்றும் பூரண சந்திரனின் தரிசனம் செய்து வருவது உங்களின் மனதில் நேர்மறை சக்திகளை நிரம்பச் செய்யும்.

சந்திர பகவான் ஒரு மனிதனின் தாயாருக்கு காரகனாகிறார். எனவே கடக ராசியினர் தினந்தோறும் தங்களின் தாயாரை வணங்கி அவர்களின் ஆசிகளை பெற்று செல்வது உங்களுக்கு பல நன்மைகளை உண்டாக்கும். மாதமொருமுறை கோயில்கள் மற்றும் துறவிகள், ஏழைகள் ஆகியோர்களுக்கு அரிசி தானமளிப்பதால் உங்களுக்கு ஏற்படவிருக்கின்ற எத்தகைய துரதிர்ஷ்டங்களையும் போக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும். கோடை காலங்களில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தலும், விலங்குகளின் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டியும் அமைப்பது சிறந்தது. கோயில்களில் இருக்கும் குளங்களில் இருக்கும் மீன்களுக்கு அவ்வப்போது அரிசி பொரியை இரையாக அளித்து வருவதும் உங்களுக்கு நன்மைகளை உண்டாக்கும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!