விழுப்புரத்தில் மாணவன் முன் தலைமை ஆசிரியர் செய்த செயல்… என்ன தெரியுமா?


விழுப்புரத்தில் ஒழுங்காக படிக்க வலியுறுத்தி மாணவன் முன் மண்டியிட்டு தலைமை ஆசிரியர் அறிவுரை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளிகளில் படித்து வரும் மாணவ- மாணவிகள் தவறு செய்தால் ஆசிரியர்கள் கண்டிப்பது வழக்கம்.

ஆனால், சமீப காலமாக பல்வேறு பள்ளிகளில் மாணவர்களை கண்டிப்பதற்கே ஆசிரியர்கள் தயங்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இருந்தாலும் மாணவர்களை நன்றாக படிக்க வைப்பதற்கும், அவர்களை தேர்ச்சி பெற வைப்பதற்கும் தங்களது பணிகளை ஆசிரியர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

விழுப்புரத்தில் காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படித்துவரும் மாணவர்களின் கல்வித் திறன் குறைவாக இருந்தது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பாலு (வயது 56) என்பவர் பொறுப்பேற்றார்.


அவர் பல்வேறு கட்டுப்பாடுகளை ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் விதித்தார். அதன் முதல்படியாக மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறார். சரியாக படிக்காத மாணவர்களுக்கு தண்டனை கொடுக்க அவர் விரும்பவில்லை.

அதற்குப்பதிலாக மாணவர்கள் முன்பு மண்டியிட்டு வணங்கி நீங்கள் நன்றாக படிக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய முடியும் என்ற அறிவுரை கூறினார். இந்த வீடியோ காட்சி வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவியது.

இது குறித்து தலைமை ஆசிரியர் பாலு கூறுகையில், “மாணவர்களை திட்டாமலும், அடிக்காமலும், அன்பு வழியில் திருத்த முடியும் என்பதற்காக இந்த எளிமையான செயலில் ஈடுபட்டு வருகிறேன்” என்றார்.

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், அவர்களிடையே சரி சமமாக தலைமை ஆசிரியர் பாலு இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருவது கல்வித்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. – Source: maalaimalar.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி