விஜயேந்திர சுவாமியின் அநாகரிகச் செயலுக்கு தலைவர்கள் கண்டனம்…!


சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தின் போது எழுந்து நிற்காத காஞ்சி விஜயேந்திர சுவாமிக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் சங்கராச்சாரியார் விஜயேந்திரர் தமிழ்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்க விரும்பாமல் அமர்ந்தபடியே இருந்துள்ளார்.

நிகழ்ச்சியின் நிறைவாக தேசியப்பண் இசைக்கப்பட்டபோது, விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத அவர் தேசிய பண்ணுக்கு மட்டும் எழுந்து நின்றிருப்பது அவர் வேண்டுமென்றே தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்திருக்கிறார் என்று தெரிய வருகிறது.

விஜயேந்திரரின் இந்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்தாய் வாழ்த்துக்கு அவமதிப்பு செய்த விஜயேந்திரர் மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.


அத்துடன் அன்னைத் தமிழை அவமதித்த விஜயேந்திரர் வெளிப்படையாக தமிழ் மக்களிடையே வருத்தம் தெரிவிக்க வேண்டும். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட தலைவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, எழுந்து நின்று மரியாதை செலுத்தி இருக்கிறார்கள்.

ஆனால், அங்கிருந்த காஞ்சி இளைய பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல், தன் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். நிகழ்ச்சியின் நிறைவாக நாட்டுப்பாடல் இசைக்கப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை செலுத்தி இருக்கிறார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது அமர்ந்திருந்த செயல் தமிழ் மொழியையும், தமிழர்களையும் அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்திய செயலாகும். நடந்துவிட்ட தவறுக்கு வருத்தம் தெரிவித்து தமிழ் மொழியையும், தமிழ் மக்களையும் மதிப்பதாக காஞ்சி மடத்தின் இளைய பீடாதிபதி நடந்துகொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்.

சென்னையில் நடந்த விழாவில், தமிழராக இல்லாவிட்டாலும், தமிழின் சிறப்பை அறிந்து அதை கற்று வரும் ஆளுனர் புரோகித்தும், மூத்த தமிழறிஞரான சாலமன் பாப்பையாவும் முதுமையையும் பொருட்படுத்தாமல் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்தினர்.


அவ்வாறு இருக்கும் போது, விஜயேந்திரர் மட்டும் தியானம் செய்ததாகக் கூறப்படுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடி யாது. உலகில் பல அரங்குகளில் பல நடைமுறைகள் இருந்தாலும் தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும் போது எழுந்து நிற்க வேண்டும் என்பது தான் மரபு ஆகும்.

இனி வரும் காலங்களிலாவது விஜயேந்திரர் போன்றவர்கள் தமிழின் பெருமையை உணர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தை மதிக்கக்கற்றுக் கொள்ள வேண்டும். நேற்றைய விழாவில் நடந்து கொண்ட விதத்திற்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றான் பாரதிதாசன்.

அந்தச் செம்மொழியை- மொழிகளில் மூத்த தமிழ் மொழியை ஒரு மடாதிபதி அவமானம் செய்திருக்கிறார். தமிழர்களே உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா? தள்ளாத வயதில் கூட கடவுள் மறுப்பாளரான பெரியார் கடவுள் வாழ்த்து பாடும்போது எழுந்து நின்ற வரலாறு தமிழ்நாட்டிலே உண்டு. தமிழ்நாட்டிலிருந்து கொண்டு தமிழை அவமதிக்கும் இதுபோன்ற மடாதிபதிகளைத் தமிழகம் ஏற்றுக் கொள்ளாது.

ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து எழ வேண்டிய சந்தர்ப்பம் இது. பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது. சிறுத்தையே வெளியில் வா. எலியென உன்னை இகழ்ந்தவன் நடுங்கிப் புலியெனச் செயல்செய்ய புறப்படு வெளியில் என்று பாடிய பாரதிதாசன் பாடலைப் போல், தமிழா ஒன்று சேர். தமிழா, தமிழால் ஒன்றுபடு. நீறுபூத்த தமிழ்ச் சமுதாயத்தைக் கேட்டுக் கொள்கிறேன். ஒன்று, ஒற்றுமைப்படு. தமிழால் இனத்தால் ஒன்று சேர். தமிழ் வாழ்க. இவ்வாறு அவர் கூறியுள்ளார். – Source: maalaimalar.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ahYcjH