கேரளாவில் 21 வயதில் விமானத்தை இயக்கிய ஜெனிஜெரோம்..!

கேரளாவில் 21 வயதில் விமானத்தை இயக்கி, இளம் பெண் விமானி என்ற பெருமைக்கு சொந்தக்காரரான ஜெனி ஜெரோமை, முதல்-மந்திரி பினராயி விஜயன் வாழ்த்தினார்.

திருவனந்தபுரம் மாவட்டம் கரகுளம் கிராமத்தை சேர்ந்த பியாஸ்ட்ரா-ஜெரோம் தம்பதி மகள் ஜெனி ஜெரோம் (வயது 21). இவர் கேரளாவின் மிக குறைந்த வயது பெண் விமானி என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.

அவர், நேற்று முன்தினம் சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வந்த ஏர் அரேபியா (ஜி 9-449) விமானத்தில் இணை விமானியாக பணியாற்றி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வெற்றிகரமாக விமானத்தை தரை இறக்கி சாதனை படைத்தார். சாதனை பெண் ஜெனி ஜெரோமுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர். குறிப்பாக கரகுளம் கிராம மக்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.

இளம் பெண் விமானி ஜெனி ஜெரோமுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

கேரளாவில் வயது குறைந்த பெண் வணிக விமானி என்ற பெருமைக்கு சொந்தக்காரரான ஜெனி ஜெரோமுக்கு எனது வாழ்த்துக்கள். அவருடைய பெருமையில் கேரளம் பங்கு கொள்கிறது. பள்ளிப்பருவ கனவை நனவாக்கி சாதனை படைத்த அவருடைய வாழ்க்கை பெண்களுக்கும் சாதாரண மக்களுக்கும் ஊக்கமாக இருக்கும். பெண்-ஆண்கள் சமம் என்ற சமுதாய நீதியினை உணர்த்தும் விதமாக ஜெனி ஜெரோமின் ஆகாய பயண சாதனை உணர்த்தி உள்ளது. ஜெனி ஜெரோமின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொடுத்த அவருடைய பெற்றோர் சமூகத்திற்கு ஓர் முன் உதாரணம்.

பெண் குழந்தைகளுக்கு ஊக்க மருந்தாக செயலாற்ற இந்த சமூகம் முழுவதும் முன்வர வேண்டும். ஜெனி ஜெரோம் மென்மேலும் வாழ்வில் வானளவில் உயர வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!