பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் 7 பேரை விடுதலை செய்ய முதலமைச்சருக்கு வேண்டுகோள்…!


அமைச்சர்கள் தலைமையில் குழு அமைத்து 7 பேரை விடுதலை செய்ய பிரதமரிடம் நேரில் வலியுறுத்த வேண்டும் என்று முதலமைச்சருக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்துவரும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-


19-2-2014 அன்று 7 பேரை விடுதலை செய்வதென மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, முடிவு செய்தார். வழக்கு மத்திய புலனாய்வுத் துறையின் கீழ் விசாரணை நடத்தப்பட்டதால் மத்திய அரசிடம் கருத்துக் கேட்டு கடிதம் அனுப்பினார். அக்கடிதத்திற்கு பதிலேதும் அனுப்பாமல் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தடையாணை பெற்றது.

பின்னர், வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்விற்கு மாற்றப்பட்டது. இதுபோன்ற வழக்குகளில் மத்திய, மாநில அரசுகளின் அதிகாரம் குறித்து 2-12-2015-ல் தீர்ப்பளித்த அரசியல் அமர்வு 7 பேர் விடுதலை தொடர்பான மாநில அரசின் கடிதம் குறித்து 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முடிவு செய்யும் என தீர்ப்பளித்தது.


23-1-2018 அன்று சுப்ரீம் கோர்ட்டில் 3 மாதங்களுக்குள் மாநில அரசின் கடிதத்தின் மீதான பதிலினை மத்திய அரசு வழங்கிட உத்தரவிட்டுள்ளது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவினை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசின் அமைச்சர்கள் தலைமையில் குழுவினை அமைத்து 7 பேர் விடுதலை என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் நீண்டகால எதிர்பார்ப்பு என்பதை பிரதமரிடம் நேரில் வலியுறுத்தி 7 பேர் விடுதலைக்கு தடையாக இல்லாமல், காலம் தாழ்த்தாமல், விடுதலைக்கு துணை நிற்க வேண்டும் என கேட்டுக்கொள்ள வேண்டுகிறேன்.

மத்திய மனித உரிமை ஆணையம் தண்டனை கழிவுடன் கூடிய 25 ஆண்டுகள் என்பதே அதிகபட்ச தண்டனையாக இருக்க வேண்டும் என வழிகாட்டியுள்ள நிலையில், தண்டனை கழிவின்றி 27 ஆண்டுகளாக சிறைபட்டிருக்கும் 7 பேரையும் இனியும் சிறையில் அடைத்து வைத்திருப்பது மனித உரிமைக்கு எதிரானது என்பதை வலியுறுத்திட வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. – Source: maalaimalar.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ahYcjH