ராஜீவ்காந்தி கொலையின் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் மத்திய அரசு – ராமதாஸ்…!


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அநியாயமாக தண்டிக்கப்பட்டு 27 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து 6 வாரங்களில் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டுள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுமே உடனே விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க. வின் நிலைப்பாடு ஆகும். அதுமட்டுமின்றி, ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை தயாரித்தது யார்? என்பதை சிறப்புப் புலனாய்வுக் குழுவால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.


ராஜீவ்காந்தி கொலையின் பின்னணியில் உள்ள பெரும் சதி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பல்முனை கண்காணிப்புக் குழுவின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இவற்றின் அடிப்படையில் பேரறிவாளனையும், மற்ற 6 தமிழர்களையும் நிரபராதி என்று விடுதலை செய்ய முடியும்.

அவ்வாறு இருக்கும்போது 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்ட அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய மத்திய அரசு மறுக்க முடியாது. 7 தமிழர்களை விடுதலை செய்யும் முடிவை எடுத்து அறிவித்தது தமிழக அரசு தான் என்பதால் அவர்கள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.

எனவே, இவ்விஷயத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடுமையான அழுத்தம் கொடுத்து 7 தமிழர்களின் விடுதலைக்கு வழி வகுக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுபட்டிருக்கிறது என்பதை மத்திய அரசுக்கு தெரிவிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி இதுகுறித்த தீர்மானத்தையும் அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். -Source: maalaimalar.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ahYcjH