முப்பது வயதை கடந்து விட்டாலே இப்படி சாப்பிட பழகுங்க..!

நம் தேவைக்கேற்ப உணவின் அளவையும், நேரத்தையும் மாற்றிக்கொண்டு விட்டோம். அவை என்ன விளைவை ஏற்படுத்தும் என்றும் யோசிப்பதில்லை.


மாறிவரும் வாழ்க்கை முறையால் நம் உணவுப்பழக்கமும் மாறிவிட்டது. நம் தேவைக்கேற்ப உணவின் அளவையும், நேரத்தையும் மாற்றிக்கொண்டு விட்டோம். அவை என்ன விளைவை ஏற்படுத்தும் என்றும் யோசிப்பதில்லை. முறையற்ற உணவுப்பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் ஏற்றத்தாழ்வு ஏற்படலாம். அதனால் சிறிய இடைவேளைகளில் குறைவான உணவை எடுத்துக் கொள்வது நல்லது. காலை 6 மணிக்கு காபி அல்லது டீ, 8 மணிக்கு இரண்டு இட்லி, 10 மணிக்கு சூப், மதியம் கீரை, கூட்டு, தயிர் இவற்றுடன் அளவான சாப்பாடு, 4 மணிக்கு கொழுப்பு குறைவான நொறுக்குத்தீனி, மாலை 6 மணிக்கு ஏதாவது திரவ உணவு, இரவு எட்டு மணிக்கு மிதமான சிற்றுண்டி. இதுதான் சரியான உணவுப் பழக்கம்.

சிலர் வாரத்தில் 5 நாட்கள் இப்படி சாப்பிட்டுவிட்டு வார இறுதியில் தங்களுக்கு பிடித்த உணவகங்களுக்கு சென்று அளவில்லாமல் சாப்பிடுவார்கள். இதனால் வார நாட்களில் சோர்வும், மனதில் ஒரு ஏக்கமும் இருக்குமே தவிர உடல் எடை குறையாது. சிறு வயதிலேயே பலருக்கு சர்க்கரை நோய் வர, உணவுப்பழக்கமும் ஒரு காரணம். பொதுவாக முப்பது வயதை கடந்து விட்டாலே உணவு பிரமிடை பின்பற்ற வேண்டும். அதாவது கொழுப்பும், கார்போஹைட்ரேட்டும் நிறைந்த உணவுகளை குறைவாகவும், புரதமும், விட்டமின்களும் நிறைந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிட வேண்டும்.

நம் உடலை உள்ளும் புறமும் சுத்தப்படுத்துவதில் தண்ணீருக்கு முக்கியப் பங்கு உண்டு. தினமும் காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும். பிறகு குறிப்பிட்ட இடைவேளைகளில் தண்ணீர் குடிக்க வேண்டும். சிலருக்கு அடிக்கடி தண்ணீர் குடிக்க முடியாது அல்லது பிடிக்காது. இவர்கள் நீர்மோர், எலுமிச்சை சாறு, தர்பூசணி சாறு போன்றவற்றை குடிக்கலாம். இப்படி தண்ணீர் குடிப்பது ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் நாளடைவில் அதுவே பழகிவிடும். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையே, சரிவிகித உணவுதான் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!