கர்ப்பிணி பெண்களின் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தரும் விளக்கெண்ணெய்!

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையை இயற்கை வழியில் விளக்கெண்ணெய் மூலமாகவே சரி செய்துவிடலாம்.


விளக்கெண்ணெய் நல்ல மலமிளக்கி. அதனால், வாரத்துக்கு மூன்று நாள் உணவில் கால் டீஸ்பூன் அளவுக்குச் சேர்த்துக்கொண்டால், மலச்சிக்கல் இல்லாமல் நிம்மதியாக வாழலாம். மலச்சிக்கல்தான் பல ஆரோக்கிய சிக்கல்களுக்கு ஆரம்பம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். விளக்கெண்ணெய்க்கு பித்தத்தைத் தணிக்கிற இயல்பு இருப்பதால், பித்த உடம்புக்காரர்கள் இதை நான் மேலே சொன்ன அளவில் சாப்பிடுவது நல்லதுதான்.

சிலருக்கு, வெயில் காலங்களில் நெஞ்சுக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் எரிச்சல் இருக்கும். குழந்தைகள் உள்பட எல்லோருக்கும் ஜீரணமாவதில் சிக்கல் ஏற்படும். அவர்கள் இரவுகளில் மிதமான சூடுள்ள நீரில் விளக்கெண்ணெய் சேர்த்துக் குடித்தால், அந்தப் பிரச்னைகள் சரியாகும். அளவைப் பொறுத்தவரை பெரியவர்கள் என்றால், கால் டீஸ்பூனும் 3-ல் இருந்து 5 வயது வரையான குழந்தைகள் என்றால் நாலைந்து சொட்டு அளவும் விளக்கெண்ணெய் எடுத்துக்கொள்ளலாம். பத்து வயதுக்கு மேல் கால் டீஸ்பூன் கொடுக்கலாம். நாள் கணக்கைப் பொறுத்தவரை பெரியவர்களுக்கு வாரத்துக்கு இரண்டு நாள், குழந்தைகளுக்கு வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் இப்படிக் கொடுத்தால் போதுமானது.

இன்றைக்குப் பல பெண்கள் நீண்ட நேரம் உட்கார்ந்தவண்ணம்தான் வேலைப் பார்க்கிறார்கள். அதிலும், குறிப்பாக குஷன் நாற்காலிகளில் உட்கார்ந்து வேலைப் பார்க்கிற பெண்களுக்கு மூலச்சூடு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். வராமல் தடுக்க, உணவில் சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். வந்துவிட்டால், இரவுகளில் நான் மேலே சொன்னபடி, விளக்கெண்ணெய் கலந்த வெந்நீர் குடிக்கலாம்.

கர்ப்பிணிகளுக்கும் மலச்சிக்கல் பிரச்சனை அதிகமாக இருக்கும். இதற்காக, மாத்திரை எடுத்துக்கொள்கிற கர்ப்பிணிப் பெண்கள் பலரையும் பார்த்திருக்கிறேன். இதை இயற்கை வழியில் விளக்கெண்ணெய் மூலமாகவே சரி செய்துவிடலாம். வாரத்துக்கு இரண்டு நாள் மட்டும் கால் டீஸ்பூன் விளக்கெண்ணெய்யை வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.

பலருக்கும் விளக்கெண்ணெயின் குளிர்ச்சித் தன்மை குறித்த பயம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள், தொப்புளில் உச்சந்தலையில், இரவுகளில் உள்ளங்கால்களில் தடவிக் கொள்ளலாம். நல்லெண்ணெய் போலவே விளக்கெண்ணெய் குளியலும் எடுக்கலாம். உடல்சூட்டை நன்கு தணிக்கும்.

விளக்கெண்ணெயின் நம்பகத்தன்மைக் குறித்துச் சந்தேகப்படுபவர்கள், ஆமணக்கு விதையை வாங்கி, செக்கில் கொடுத்து ஆட்டிப் பயன்படுத்தலாம்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!