பாபா பார்வையில் இருந்து எந்த ஒரு பக்தனும் தப்ப இயலாது.!

இறைவன், தன் பக்தனைப் பொறி வைத்துப் பிடிப்பான் என்று சொல்வார்கள். சீரடி சாய்பாபாவும் அப்படித்தான். அவர் தன் ஆத்மார்த்த பக்தர்களை ஆட்கொண்ட விதம் மிக, மிக அலாதியானது.

சில பக்தர்களை அவர் நேரில் காட்சிக் கொடுத்து அழைப்பார். சில பக்தர்களை அவர் கனவில் தோன்றி தீட்சை அளித்து சீரடிக்கு வரவைப்பார். அவர் சர்வ வியாபி. அவர் பார்வையில் இருந்து எந்த ஒரு பக்தனும் தப்ப இயலாது.

சாய்பாபா அடிக்கடி ஒரு கருத்தை கூறுவார். “எனது பக்தன் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், அவன் மூவாயிரம் மைல்களுக்கு தொலைவில் இருந்தாலும் காலில் நூல் கட்டி உள்ள சிட்டுக்குருவியை இழுப்பது போல அவன் சீரடிக்கு இழுக்கப்படுவான்” என்பார்.

மும்பையைச் சேர்ந்த லாலா லட்சுமிசந்த் என்ற பக்தரை சீரடி சாய்பாபா அப்படித்தான் ஆட்கொண்டார். 1910-ம் ஆண்டு அவருக்கு சாய்பாபா தம்மைப் பற்றி தெரிய வைத்தார். அதற்கு முன்பு சாய்பாபா பற்றி லட்சுமிசந்த் கேள்விப்பட்டிருந்தாலும், அவரை நேரிலோ, புகைப்படத்திலோ பார்த்தது இல்லை. மும்பையில் ரெயில்வேயிலும் ராலி பிரதர்ஸ் நிறுவனத்திலும் குமாஸ்தாவாக பணியாற்றிய அவர் 1910-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சாந்தக் குருசில் தங்கி இருந்தார். அன்றிரவு ஒரு வயதானவர் தாடியுடன் அவர் கனவில் தோன்றினார்.

அவரைச் சுற்றி நிறைய பக்தர்கள் நின்று கொண்டிருந்தனர். அதிகாலையில் இந்த கனவைக் கண்ட லட்சுமிசந்த், அந்த வயதானவர் யார் என்று தெரியாமல் குழம்பினார். அதற்கான விடை அவருக்கு அடுத்த வாரமே தெரிந்தது. சாய்பாபாவின் முதன்மைப் பக்தர்களில் ஒருவரான தாஸ்கணு மும்பையில் அந்த வாரம் பாபா பற்றிய கீர்த்தனை மற்றும் சொற்பொழிவு நடத்தினார். அந்த கீர்த்தனைக்கு லட்சுமிசந்த்தும் அழைக்கப்பட்டிருந்தார்.

கீர்த்தனை நடந்த இடத்தில் சீரடி சாய்பாபாவின் பெரிய படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த படத்தைப் பார்த்ததும் லட்சுமிசந்த்துக்கு ஆச்சரியம் தாங்க இயலவில்லை. தன் கனவில் வந்தது இவர்தான் என்று மகிழ்ச்சி பொங்க கூறினார். அந்த மகிழ்ச்சியில் இருந்த அவருக்கு தாஸ்கணு நடத்திய சொற்பொழிவு மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சீரடி சாய்பாபாவின் சிறப்புகளையும், மகிமைகளையும் தாஸ்கணு சொல்ல, சொல்ல லட்சுமிசந்த்துக்கு இருப்புக் கொள்ளவில்லை. உடனே சீரடிக்கு செல்ல வேண்டும். சாய்பாபாவை நேரில் பார்த்து அவர் கால்களில் விழுந்து ஆசி வாங்க வேண்டும் என்று துடித்தார். எப்படியாவது சீரடிக்கு போய் விட வேண்டும் என்று மனதுக்குள் உறுதி செய்து கொண்டார். தனியாக செல்வதை விட யாரையாவது துணைக்கு அழைத்துச் செல்லலாம் என்று நினைத்தார்.

அடுத்த வினாடி அவருக்கு அவரது நண்பர் சங்கர்ராவ் நினைவு வந்தது. இரவு 8 மணிக்கு சங்கர்ராவ் வீட்டுக் கதவைத் தட்டினார். கதவைத் திறந்த சங்கர்ராவ் நலம் விசாரித்து விட்டு “என்ன விஷயமாக பார்க்க வந்திருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு லட்சுமிசந்த் “சீரடிக்கு சென்று சாய்பாபாவை பார்க்கலாம் என்று ஆசையாக உள்ளது. நீயும் என்னுடன் சீரடிக்கு வருகிறாயா?” என்றார்.

இதைக் கேட்டதும் சங்கர்ராவுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. “நானும் சீரடிக்கு போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளை வா… நாளைக்கேப் புறப்படலாம்” என்றார். பொதுவாக சீரடிக்கு செல்ல வேண்டும் என்று எந்த ஒரு பக்தன் உள்ளன்போடு உண்மையாக விரும்புகிறானோ… அவனது ஆன்மிக முயற்சிக்கு பாபாவே யாரையாவது ஒருவரை துணைக்கு அனுப்பி உதவிகள் செய்ய வைத்து விடுவார் என்று சொல்வார்கள். லட்சுமிசந்த், சங்கர்ராவ் இருவரது வாழ்விலும் அது மிகச் சரியாக நடந்தது.

மறுநாள் லட்சுமிசந்த் தன் மாமாவிடம் 15 ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு சீரடிக்குப் புறப்பட்டார். சங்கர்ராவும் ஆயத்தமாக வந்திருந்தார். இருவரும் மும்பையில் இருந்து ரெயிலில் சீரடிக்குப் புறப்பட்டு வந்தனர். ரெயிலில் அவர்கள் இருவரும் சும்மா வரவில்லை. சாய்பாபாவின் ஆசியைப் பெறும் வகையில், பாபா பற்றிய பாடல்களை பாடியபடி வந்தனர்.

மற்ற நேரங்களில் ரெயிலில் உள்ள சக பயணிகளிடம் சீரடி சாய்பாபாவின் அற்புதங்கள் பற்றி லட்சுமிசந்த் விசாரித்தபடி இருந்தார். அவரிடம் பேசிய அனைவரும், “சீரடியில் வாழும் சாய்பாபா மிகப்பெரிய ஞானி” என்று புகழ்ந்து கூறினார்கள். இதனால் லட்சுமிசந்த்துக்கு சாய்பாபா பற்றிய எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. கோபர்கான் ரெயில் நிலையத்தில் இருவரும் இறங்கினார்கள். கோபர்கானில் பாபாவுக்கு பழ வகைகள் வாங்கிச் செல்ல வேண்டும் என்று லட்சுமிசந்த் நினைத்திருந்தார்.

ஆனால் ரெயிலில் மற்றவர்களிடம் பேசிக் கொண்டே வந்த காரணத்தால் பழ வகைகள் வாங்குவதற்கு எப்படியோ மறந்து விட்டார். சீரடி அருகில் வந்த பிறகுதான் பாபாவுக்கு சமர்ப்பிக்க பழ வகைகள் வாங்கவில்லையே என்பது லட்சுமிசந்த்துக்கு நினைவுக்கு வந்தது. பழம் வாங்க முடியாமல் போய் விட்டதே என்று அவர் மனம் மிகவும் வேதனைப்பட்டது. அடுத்த வினாடி ஒரு கிழவி கூடை நிறைய பழ வகைகளை எடுத்துக் கொண்டு கூவி, கூவி விற்றபடி வந்தாள்.


அவளைப் பார்த்ததும் லட்சுமிசந்த் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. “அம்மா… இங்கே வாருங்கள்” என்று கூறியபடி வண்டியில் இருந்து இறங்கினார்.

“சாய்பாபாவுக்கு சமர்ப்பிக்க வேண்டும். நல்ல பழமாக எடுத்துத் தாருங்கள்” என்று கேட்டார். அந்த மூதாட்டி மகிழ்ச்சியில் சிரித்தாள். “பாபாவுக்காக… இதோ நல்ல பழங்களாகத் தருகிறேன்” என்று எடுத்துக் கொடுத்தாள். பிறகு மீதம் இருந்த அனைத்து பழங்களையும் எடுத்துக் கொடுத்த அந்த மூதாட்டி, “இந்த பழங்களை என் சார்பில் பாபாவிடம் கொடுத்து விடுங்கள்” என்றாள்.

பிறகு பழத்துக்குரிய பணத்தை வாங்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டாள். லட்சுமிசந்த்துக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நடப்பதெல்லாம் கனவா என்று தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டார். பழம் வாங்க வேண்டும் என்று விரும்பிய மறுவினாடி பழக்காரி வந்தது எப்படி என்று லட்சுமிசந்த் மனம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது. அடுத்த சில நிமிடங்களில் லட்சுமிசந்த்தும், சங்கர்ராவும் சீரடி வந்து சேர்ந்தனர்.

குதிரை வண்டியில் இருந்து கீழே இறங்கிய லட்சுமிசந்த் கண்ணில் மசூதியில் கட்டப்பட்டிருந்த கொடிதான் தெரிந்தது. அந்தக் கொடியைப் பார்த்து அவர்கள் இருவரும் வழிபட்டனர். பிறகு இருவரும் மசூதிக்குள் நுழைந்தனர். சாய்பாபாவை நேரில் கண்டதும் லட்சுமிசந்த், சங்கர்ராவ் இருவரும் தங்களையே மறந்தனர்.
வாங்கிச் சென்றிருந்த பழ வகைகளை எப்போது பாபாவிடம் கொடுத்தோம் என்ற உணர்வே இல்லாமல் அவர்கள் இருந்தனர். கண்ணீர் மல்க அவர்கள் பாபாவை பார்த்து உருகினார்கள்.

லட்சுமிசந்த் உணர்ச்சிப் பிழம்பாக நின்றார். பாபாவை உரிய முறையில் வணங்கினார். பாபாவின் காலடியில் விழுந்து, “நீங்களே என்னை ஆட் கொள்ள வேண்டும்” என்று சரண் அடைந்து கண்ணீர் விட்டார். அவரையே சாய்பாபா உற்றுப் பார்த்தார். பிறகு அவர் சிரித்தப்படியே லட்சுமிசந்த்தைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

“என்னைப் பார்ப்பதற்கு நீ கடன் வாங்கிக் கொண்டு வர வேண்டுமா? என்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காக நீ கடன் வாங்கியதில் எனக்கு உடன்பாடு இல்லை. சரி இப்போது உனக்கு சந்தோஷமா? உன் ஆசைகள் பூர்த்தி ஆகி விட்டதா? என் மீது உனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்து விட்டது. அதனால்தான் ரெயிலில் வரும்போது மற்ற பயணிகளிடம் என்னைப் பற்றி விசாரித்துக் கொண்டே வந்தாயே…? நீ ஏன் அவ்வாறு என்னைப் பற்றி விசாரித்தாய்?

எப்போதுமே நாம் நமது கண்களாலேயே எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். அப்போது உனக்கு எல்லாம் புரிந்து விடும். முதலில் உனக்கு வந்த கனவு உண்மையா? பொய்யா என்று நினைத்துப் பார். அதன் பிறகு என் கீர்த்தனைகள் உனக்கு எல்லாவற்றையும் சொல்லி இருக்குமே. இப்போது உன் சந்தேகங்கள் எல்லாம் தீர்ந்து விட்டதா?”

சாய்பாபா இவ்வாறு பேச, பேச லட்சுமி சந்த் அதிர்ச்சியில் வாய் பேச முடியாமல் உறைந்து போய் நின்றார். மும்பையில் புறப்பட்டது முதல் சீரடி வந்து சேர்ந்தது வரை அத்தனையையும் பாபா புட்டுப் புட்டு வைக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டார்.

பாபா எல்லா இடத்திலும் நிறைந்து இருப்பவர் என்பதை லட்சுமிசந்த் அனுபவப்பூர்வமாக உணர்ந்தார். பாபாவுக்கு தன்னைப் பார்க்க வரும் பக்தர்கள், மற்றவர்களிடம் கடன் வாங்கிக் கொண்டு வந்தால் பிடிக்காது. அத்தகைய பக்தர்களை அடையாளம் கண்டு கொண்டு அறிவுரை கூறுவார். லட்சுமிசந்த் விஷயத்திலும் அது 100 சதவீதம் அப்படியே நடந்தது.

லட்சுமிசந்த்தை சீரடியில் 3 நாட்கள் தங்கி இருந்து விட்டு போகும்படி சாய்பாபா கூறி இருந்தார். இரண்டாம் நாள் லட்சுமிசந்த் மசூதிக்கு சென்றிருந்த போது ஒரு பக்தர் “சன்ஸா” எனும் பிரசாதத்தை கொடுத்தார். அதன் ருசியில் மனதைப் பறிகொடுத்த லட்சுமிசந்த் மூன்றாவது நாளும் அதையே எதிர்பார்த்துச் சென்றார். மசூதியில் அவர் அமர்ந்திருந்தபோது பாபாவிடம், “உங்களுக்கு இன்று என்ன நைவேத்தியம் வேண்டும்” என்று கேட்கப்பட்டது.

உடனே பாபா அருகில் இருந்த லட்சுமிசந்த்தை பார்த்து சிரித்துக் கொண்டே, சன்ஸா வேண்டும் என்று கேட்டார். உடனே 2 பானைகள் நிறைய சன்ஸா கொண்டு வரப்பட்டது. அதை வாங்கிய பாபா அதில் ஒன்றை எடுத்து லட்சுமிசந்திடம் கொடுத்து, “இதைத் தானே எதிர்பார்த்தாய், சாப்பிடு” என்றார். லட்சுமிசந்த்துக்கு உதறல் எடுத்தது. நம் மனதில் நினைப்பதை கூட பாபா கண்டுபிடித்து சொல்லி விடுகிறாரே என்று ஆச்சரியப்பட்டார்.

அன்று அவர் மசூதியில் இருந்து புறப்பட்டபோது, “லட்சுமிசந்த் நீ முதுகு வலியால் அவதிப்படுகிறாய் அல்லவா… நான் கொடுக்கும் மருந்தைப் போட்டுக் கொள், சரியாகி விடும்“ என்றார். தனக்கு முதுகு வலி வந்திருப்பதை லட்சுமிசந்த் வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருந்தார். அதையும் பாபா கண்டுபிடித்து விட்டாரே என்று திக்குமுக்காடிப் போனார்.

அன்றிரவு பாபா மசூதியில் இருந்து சாவடிக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். அப்போது பாபா கடுமையான இருமலில் அவதிப்பட்டார். அதைப் பார்த்த லட்சுமிசந்த், “பாபாவுக்கு திருஷ்டி பட்டிருக்கலாம். அதனால்தான் இருமலால் அவதிப்படுகிறார்” என்று நினைத்தார்.

மறுநாள் காலை பாபாவிடம் லட்சுமிசந்த் விடைபெற சென்றார். அப்போது பாபா அவரைப் பார்த்து, “எனக்கு திருஷ்டிபட்டு விட்டது. அதனால்தான் இருமினேன்” என்றார். இதைக் கேட்டதும் லட்சுமிசந்த் மெய்சிலிர்த்தார். தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் பாபா அறிந்துள்ளார் என்பதை தெளிவுபட உணர்ந்தார்.

பாபா காலில் விழுந்து கதறி கதறி அழுதார். சத்குரு தெய்வமே என்னை வழி நடத்துங்கள் என்று கண்ணீர் விட்டார். அவரை ஆறுதல்படுத்தி ஆசி வழங்கிய பாபா உதியை கொடுத்து வழியனுப்பி வைத்தார். அதன் பிறகு சீரடிக்கு அடிக்கடி வரும் பக்தர்களில் ஒருவராக லட்சுமிசந்த் மாறிப் போனார். – Source: Maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!