தினமும் பெண்கள் உடற்பயிற்சி செய்வதால் அடையும் நன்மைகள்!

உடற்பயிற்சியில் ஈடுபடும் பெண்கள் பலவிதமான நன்மைகளை அடைகிறார்கள். எத்தகைய நன்மைகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.


உடற்பயிற்சி செய்வது உடல் எடையை குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ மட்டுமல்ல. உடல் மற்றும் மனநலனை மேம்படுத்தவும் உதவுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடும் பெண்கள் பலவிதமான நன்மைகளை அடைகிறார்கள். எத்தகைய நன்மைகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

வயதாகும் போது உடலில் தசை வளர்ச்சி குறையும். அதுமட்டுமல்லாமல் தசைகள் வலிமை இழக்கக்கூடும். உடற்பயிற்சி தசைகளை உருவாக்குகிறது. பலப்படுத்துகிறது. வலுவுள்ள தசைகள் எலும்புகளை காயங்கள் ஏற்படாமல் காக்கும். உடற்பயிற்சி செய்யும் போது ரத்த ஓட்டம் சீராகி தசைகளுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்கிறது. மூட்டு வலியை குறைக்கிறது.

உடற்பயிற்சி செய்யும் போது சருமத்துக்கு அதிக ஆக்சிஜன் நிறைந்த ரத்த ஓட்டம் அதிகரிக்கும். தோல் உட்பட உடல் முழுவதும் உள்ள உயிரணுக்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்ச்சத்துக்களை கொண்டு செல்வதால் சரும செல்கள் வளர்ச்சி பெறுகின்றன. உடற்பயிற்சி செய்வதால் வியர்வை வழியாக உடலில் உள்ள நச்சுக்பொருட்கள் வெளியேறி சருமம் புத்துணர்சி பெறுகிறது.

உடற்பயிற்சி செய்யும் போது எண்டோர்பின் எனப்படும் மகிழ்ச்சிக்குரிய ஹார்மோன் சுரக்கிறது. இது வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. இதனால் மனதில் அமைதி நிலவுகிறது. மன அழுத்தம், கவலை மற்றும் மனச்சோர்வு நீங்குகிறது. மேலும் உடற்பயிற்சி செய்வதால் மனநிலையை கட்டுப்படுத்த உதவும் ஹார்மோன்களும் சுரக்கின்றன. இதனால் தசைகள் தளர்த்தப்பட்டு மனப்பதற்றம் வருவது தடுக்கப்படுகிறது.

உடற்பயிற்சி தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. உடற்பயிற்சி செய்யும் போது தசைகள் சோர்வடைவதால் உடல் நிதானமாக தூக்கத்தை நோக்கி செல்லும். பொதுவாக உடற்பயிற்சி செய்வதால் உடலில் வெப்பநிலை குறைவதால் உடல் தானாகவே தூக்க உணர்வை நோக்கி செல்லும்.

தூக்கத்தின் போது உடல் தன்னை தானே சரி செய்து கொள்கிறது. நல்ல தூக்கத்தின் போது நினைவு திறனை அதிகரிப்பது முதல் உடல் வலிகள் மற்றும் வீக்கங்கள் குறைவது வரையிலான பல நன்மைகள் ஏற்படுகின்றன. தூக்கத்தின் போது மனித வளர்ச்சிக்கான ஹார்மோன்கள் சுரக்கின்றன. இந்த ஹார்மோன்கள் உடலின் வளர்ச்சி உடலின் அமைப்பு செல்களை சீர்படுத்துதல் வளர்சிதை மாற்றம் போன்ற பல செயல்களுக்கு காரணமாகின்றன. சீரான தூக்கம் இல்லையெனில் மேற்கண்ட செயல்கள் பாதிக்கப்பட்டு உடல் ஆரோக்கியம் குறைகிறது.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம். உடற்பயிற்சி செய்வதால் நோய் எதிர்ப்பு அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செல்கள் தங்கள் வேலையை திறமையாக செய்ய உடற்பயிற்சி உதவுகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!