பக்தர்களை பரிவோடு பார்த்த பாபாவின் அருள்பொங்கும் விழிகள்..!

காகா மகாஜனிக்கு எந்த வகையில் ஷீரடி சாய்பாபா நன்மை அருளினார் என்பதை பார்க்கலாம்.

காகா மகாஜனி என்பவர், பாபாவின் தீவிர அன்பர். மும்பையில் வசித்து வந்தார். அப்போது கிருஷ்ண ஜெயந்தி விழா வந்தது. கண்ணனின் அவதார தினத்தை ஒட்டி ஷீரடியில் கொண்டாட்டங்கள் நடைபெறும். பாபா பிரத்யட்ச கண்ணன் அல்லவா! கண்ணனை நேரில் தரிசித்த பலனை அடைய வேண்டுமானால், பாபாவை தரிசனம் செய்தால் போதும். ஷீரடி செல்வோம்.

ஒருவாரம் தங்கி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களை அனுபவிப்போம்… இப்படி முடிவுசெய்த அவர், தம் முதலாளியிடம் ஒருவாரம் விடுப்பு சொல்லிவிட்டு, அலுவலகத்தில், இருந்த இன்னொருவரிடம் தாம் பார்த்துக் கொண்டிருந்த வேலைகளை ஒப்படைத்து விட்டு புறப்பட்டார்.

அவர் ஷீரடி செல்லலாம், ஆனால் பாபா எத்தனை நாள் விரும்புகிறாரோ அத்தனை நாள் தானே அங்கு தங்க முடியும்? ஷீரடியில் ஒருவாரம் தங்க வேண்டும் என்று அவராக எப்படி முடிவு செய்யலாம்? அப்படி முடிவு செய்தால் அந்த ஆணவத்தின் மீது பாபாவின் குட்டு விழும் அல்லவா? பாபாவை அவர் தரிசித்த மறுகணமே, பாபா அவரிடம், அதுசரி. நீ எப்போது மும்பை திரும்பப் போகிறாய்? என்று விசாரித்தார்!

என்ன இது! ஒருவாரம் தங்கி கோகுலாஷ்டமி கொண்டாட்டங்களைக் காண வந்தால், வந்து தரிசித்த மறுகணமே இப்படிக் கேட்கிறாரே பாபா? காகா மகாஜனியின் உள்ளம் துணுக்குற்றது. ஆனால், அவர் மறுத்து எதுவும் பேசவில்லை. பணிவோடு, தாம் ஒருவாரம் ஷீரடியில் தங்கும் உத்தேசத்தில் வந்ததாகவும், ஆனால் பாபா எத்தனை நாள் தங்க உத்தரவு கொடுக்கிறாரோ அத்தனை நாள் மட்டுமே தங்க முடிவுசெய்திருப்பதாகவும் கூறினார்.

அவர் பதிலால் பாபாவின் மனம் நிறைவடைந்தது. பாபாவின் கண்கள் அவரையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தன. ஒருவரின் கண்களின் மூலமாக அவர் உள்ளத்தையும் அவரது எதிர்காலத்தையும் படித்து விடுவாரே பாபா? திடீரென பாபா உத்தரவிட்டார்: நீ ஒரே ஒருநாள் இங்கு தங்கினால் போதும். நாளையே புறப்பட்டு பம்பாய் போ.

நாளையே மறக்காமல் அலுவலகத்திற்கும் போய்விடு! ஏன் இந்த உத்தரவு என்றறியாமல் வியப்பும் வருத்தமும் அடைந்தார் காகா மகாஜனி. ஆனால். மறுபேச்சுப் பேசாமல் அவரது உத்தரவுக்குக் கீழ்ப்படிந்தார். மறுநாளே மும்பை சென்றார். அன்றே அலுவலகத்திற்கும் சென்றார். அங்கே….

அங்கே அவரது முதலாளி கவலையோடு, அவரை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அப்பனே! வந்தாயா? என்று கட்டியணைத்துக் கொண்டார். என் கடிதம் கிடைத்ததா? என்று கேட்டார். எந்தக் கடிதமும் கிடைக்கவில்லையே! என்றார் காகா. உன்னை எதிர்பார்த்துத் தான் காத்திருக்கிறேன்! என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் முதலாளி.

காரணம் இதுதான். அலுவலகத்தின் மானேஜர் திடீரென நோய்வாய்ப்பட்டு விட்டார். நிர்வாகத்தில் பெரும் சிக்கல். மானேஜர் செய்துவந்த வேலைகளை எப்படி நிர்வகிப்பதென யாருக்கும் தெரியவில்லை. மானேஜர் பொறுப்பு, உடனடியாக காகாவிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது. இடைக்கால மானேஜர் பொறுப்பைச் செம்மையாக நிறைவேற்றினார் காகா.

முழுமனதோடு அந்தப் பணியைச் செய்தார். நிரந்தர மானேஜர் செய்த பணி நேர்த்தியை விட, தற்காலிக மானேஜர் செய்த பணியின் நேர்த்தி மேலும் சிறப்பாக இருந்தது! இடர்ப்பாடு ஏற்பட்ட காலத்தில் கைகொடுத்தமைக்காக அவருக்கு விரைவிலேயே பதவி உயர்வு தரப்பட்டது. பாபாவின் அருளால் கிட்டிய பதவி உயர்வு என நெகிழ்ந்தது காகாவின் உள்ளம்.

அலுவலகத்திலிருந்து காகாவை உடனே மும்பை திரும்புமாறு, முதலாளி ஷீரடிக்கு அனுப்பிய கடிதம், இரண்டு நாட்கள் கழித்து ஷீரடியைச் சென்றடைந்ததும், அது பின்னர் காகாவின் மும்பை முகவரிக்கே திரும்ப அனுப்பப்பட்டதும் பிறகு நடந்த சம்பவங்கள்.

எப்படி மும்பையில் ஒரு தனியார் அலுவலகத்தில் நேர்ந்த சிக்கல், பாபாவுக்கு முன்கூட்டியே தெரிய வந்தது? ஏன் தெரிய வராது? கடவுளால் அறிய இயலாத விஷயம் என்று உலகில் ஏதும் உண்டா என்ன? பதவி உயர்வு கிடைத்த பின், காகா ஷீரடி வந்து, பாபாவின் தாமரைப் பாதங்களைக் கண்ணீரால் கழுவினார். பாபா சிரித்துக் கொண்டே அவரது கன்னங்களைத் துடைத்து விட்டார். அடியவர்களுக்கு நன்மை செய்வதைத் தவிர எனக்கு வேறென்ன வேலை? என்று பரிவோடு கேட்டன பாபாவின் அருள்பொங்கும் விழிகள்.-Source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!