நாடி வரும் நோயாளிகளுக்கு விபூதி பிரசாதத்தால் நோய்களை நீக்கியவர்..!


மத நல்லிணக்கத்தை வளர்த்த ஆன்மிக மகான்ஜாதி, மத வேறுபாடுகளின்றி அனைத்து மக்களாலும் போற்றிக் கொண்டாடப்படும் ஆன்மிக மகான் ஷிர்டி சாய் பாபா அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டம் ஷிர்டியில் வசித்தார். பக்தர்கள் திரட்டிய தகவல்கள் மூலம், இவரது அவதார தினம் 1836 செப்டம்பர் 28 என தெரியவந்தது. பிறந்த இடம், இயற்பெயர், குழந்தைப் பருவம் பற்றிய தகவல்கள் இல்லை.

2 ஷிர்டியில் பழைய மசூதி அருகே வேப்பமரத்தின் அடியில் 8 வயதில் தியானம் செய்தார். பின்னர், ஊரைவிட்டுச் சென்றவர், 16 வயதில் ஒளிபொருந்திய தோற்றத்துடன் ஷிர்டி திரும்பினார். அவரைப் பார்த்த பூசாரி, ‘ஸ்வாமி’ என்று பொருள்படும் வகையில் ‘சாய்’ என்று அழைத்தார். ‘அப்பா’ என்று பொருள்படும் வகையில் ‘பாபா’ என்றும் அழைக்கப்பட்டார். பக்தர்கள் அன்போடு அழைத்த அந்த பெயர்களே நிலைத்துவிட்டது.

3 சிறு வயதில் முஸ்லிம் பெரியவர் ஒருவர் இவரை வளர்த்ததாகக் கூறப்படுகிறது. அவரது மறைவுக்குப் பிறகு, கோபால்ராவ் தேஷ்முக் என்ற ஞானியைத் தன் குருவாக ஏற்றார். அவர் மறைவதற்கு முன்பு சகல சக்திகளையும் இவருக்கு அளித்துவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.


4 ஷிர்டியில் ஒரு யோகி போல வாழ்ந்தார். பிச்சை எடுத்தே சாப்பிடுவார். இந்து இஸ்லாமிய மதங்கள் இடையே உள்ள ஒற்றுமைகளை எடுத்துக்கூறி, இரு தரப்பினர் இடையே நல்லிணக்கத்தை வளர்த்தார்.

5 நோயாளிகளை குணப்படுத்தினார். பல அற்புதங்களை செய்தார். பல ஞானிகள் இவரை சந்தித்தனர்.

6 தான் தங்கியிருந்த மசூதிக்கு ‘துவாரகாமயி’ என்று பெயரிட்டார். அங்குள்ள விளக்குகளுக்கு ஊற்ற, ஒரு வியாபாரியிடம் எண்ணெய் கேட்டார். வியாபாரி தர மறுத்ததால், தண்ணீரை ஊற்றி விளக்குகளை எரியச்செய்து அற்புதம் நிகழ்த்தினார். அவரது புகழ் மேலும் பரவியது.


7 ‘அல்லா மாலிக்’ (‘கடவுளே அரசர்’), ‘அனைவரது இறைவனும் ஒன்றே’ என்பார். தெய்வீகத் தன்மையால் பல அற்புதங்கள் செய்த பாபா, குழந்தைகளிடம் குழந்தைபோல பழகுவார். பஜன்கள், பக்திப் பாடல்களை மிகவும் விரும்புவார். பக்தர்களைப் பாடச் சொல்லி கேட்கும் இவர், சில நேரங்களில் அதற்கேற்ப ஆடவும் செய்வார்.

8 ஏழைகளின் துயரங்களைக் கண்டு வேதனையடைபவர், ஒரு தாயைப் போல அவர்களிடம் நடந்துகொள்வார். தொழுநோயாளிகளின் புண்களைத் தன் கையால் கழுவி சுத்தம் செய்து மருந்து போடுவார். நாடி வரும் நோயாளிகளுக்கு விபூதி பிரசாதம் அளித்தே அவர்களது நோய்களை நீக்கியவர்.

9 பல்வேறு சாஸ்திரங்களைக் கற்று உணர்ந்தவர். பகவத்கீதை, குர்ஆனுக்கு அற்புதமான விளக்கங்களை அளித்து, அறிஞர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மதங்களைக் கடந்து நின்றார்.

10 எண்ணிலடங்கா பக்தர்களால் ‘சாய் மஹராஜ்’ என்று இன்றளவும் போற்றி வழிபடப்பட்டு வரும் ஷிர்டி சாய் பாபா 82-வது வயதில் (1918) ஸ்தூல உடலை விட்டுப் பிரிந்தார். ஷிர்டியில் இவர் சமாதி அடைந்த இடம் பல லட்சம் பேர் வழிபடும் புண்ணியத் தலமாக விளங்குகிறது. – Source: thehindu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!