நான் உன்னுடைய தாய் அல்லவா? ஷீரடி சாயி பாபாவின் புனித சரிதம்..!


நான் எங்கும் இருக்கிறேன்… நீரிலும், நிலத்திலும், காய்ந்துபோன மரக்கிளையிலும், மனிதர்களிடையேயும், வனத்திலும், இந்த தேசத்திலும், வெளி தேசங்களிலும் என எங்கும் இருக்கிறேன். – பாபா மொழி

சாயி ஊருக்கு வந்திருப்பது தெரிந்ததும், பாய்ஜாபாய் அவரைப் பார்க்க பைத்தியம் பிடித்தவள் போல் அலைந்தாள். தன் மகன் தாத்யாவைக் கூப்பிட்டு, ‘‘அவர் வந்து நான்கு நாட்களாகியும் ஏன் என்னிடம் சொல்லவில்லை. நான் உன்னுடைய தாய் அல்லவா?’’ என்று கோபமாகக் கேட்டாள்.
‘‘யார் இல்லை என்றார்கள். நான் உன் மகன்தானே?’’
‘‘ஆமாம், அதற்கென்ன?’’
‘‘அப்படியானால் சாயி யார்?’’


‘‘அவரும் என் மகன்தான். நீ என் வயிற்றில் பிறந்தவன். அவர் என் வயிற்றில் பிறக்காத பிள்ளை. அவர் எனக்குக் குழந்தை, தந்தை, சகோதரர், கடவுள்… எல்லாம்! அப்படிப்பட்டவர் என்னை ‘அம்மா’ என்று அழைக்கிறாரே, பார்த்தாயா? ஆனால்…’’
‘‘என்ன ஆனால்..?’’
‘‘அவர் வந்தது எனக்குத் தெரியாது. ஆனால், நான் இங்கு இருப்பது அவருக்குத் தெரியுமே! ஒரு தாயை மகன் எப்படி மறக்கலாம்? தாயைப் பற்றிய நினைவுகூட வரவில்லையா?’’
அந்த நேரத்தில், ‘‘அம்மா… அம்மா… நான் வந்திருக்கிறேன்’’ என்ற மதுரமான குரல் அவள் காதில் கேட்டது.
‘‘தாத்யா, யாரோ அழைப்பதுபோல் கேட்கிறது. உனக்கும் அது கேட்டதா?’’

‘‘ஆமாம் அம்மா… வாசலில் சாயி வந்திருக்கிறார் போலிருக்கிறது.’’
‘‘சாயீ… சாயீ…’’ என்றவாறே வாசலுக்கு ஓடினாள். அங்கு… சாயி நின்றிருந்தார்!
பயில்வானைப் போன்ற உடற்கட்டுடன் உயரமாக நின்றிருந்த தேஜஸ்வியைப் பார்த்ததும் பாய்ஜாபாய் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தாள். மறுகணம் ஆவேசத்துடன் சாயியைக் கட்டிக்கொண்டாள். விரல்களைச் சொடுக்கி, திருஷ்டி கழித்தாள். ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள்.
‘‘என்ன தாயீ, என்மேல் கோபமா?’’ என வினவினார் சாயி.
‘‘ஆமாம்… நீ வந்து எவ்வளவு நாட்களாகிறது. என்னை எப்படி மறக்கலாம்?’’

‘‘மறந்திருந்தால் நான் எப்படி இங்கு வந்திருப்பேன்?’’ என்றார் சிரித்துக் கொண்டே.
‘‘நீ இனிமையாகப் பேசிச் சமாளிப்பாய். சும்மா உட்கார். சப்பாத்தி சுட்டுக் கொடுக்கிறேன். சுடச்சுட சாப்பிட்டு, பிறகு ஊர் சுற்றப் போ!’’
‘‘தாத்யா, என்ன பேசாமல் உட்கார்ந்திருக்கிறாய்? உன் தாய் உன்னைவிட என்மேல் அளவற்ற அன்பாக இருக்கிறாள் என்றுதானே கோபம்?’’
‘‘ஆமாம்…’’

‘‘பைத்தியக்காரா, யாராவது தாயின் பாசத்தில் பங்கு போட முடியுமா? பிரம்பால் அடித்துத் தண்ணீரைப் பிரிக்க முடியாது. அதைப் போல தாயின் பாசத்தைப் பிரிக்க முடியாது. தாய்ப்பாசம் என்பது கடலைப் போன்றது. எண்ணற்றவர்கள் அந்தத் தண்ணீரை எடுத்துச் சென்றாலும், கடல் பின்வாங்குவதும் இல்லை, சிறிதளவும் வற்றுவது இல்லை! எதற்கு வீணாகக் கவலைப்படுகிறாய்?’’
தாத்யாவின் முகம் மலர்ந்தது. சாயி அருகில் போய் உட்கார்ந்தான். அவர் கருணையோடு தட்டிக் கொடுத்தார்.
‘‘அம்மா! எங்கள் இருவருக்கும் சாப்பாடு போடு…’’


மாருதி கோயிலின் முன்பாக சாயி கட்டிலில் உட்கார்ந்து ஹூக்கா ஊதிக்கொண்டிருந்தார். அவரைச் சுற்றி இளைஞர் கூட்டம் அவர் பேசுவதைக் கேட்க ஆவலாக இருந்தது. கோயிலுக்கு வெளிப்புறமாக உருண்டையான பெரிய கல் ஒன்று இருந்தது. இளவட்டக்கல்! அது கனமாக இருந்தது. பழங்காலத்தில் உடற்பயிற்சி செய்பவர்கள் அதைத் தூக்கித் தோளில் வைத்து தங்கள் பலத்தைக் காட்டுவார்கள். அப்படி சாகசம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அதை யார் தூக்குகிறார்களோ, அவர்களுடைய மார்பு வெற்றியால் துள்ளும்.
சாயியும் அந்த இளைஞர்களும் பேச்சு சுவாரஸ்யத்தில் இருந்தபோது, ஒரு நாய் எங்கிருந்தோ ஓடி வந்து அந்தக் கல்லை முகர்ந்து பார்த்தது. அது காலைத் தூக்குவதைக் கண்டதும் ஒரு இளைஞன் அதை அதட்டினான். மற்றவர்களும் சேர்ந்து அதை விரட்டினர்.
‘‘ஏன் அந்த நாயை விரட்டினீர்கள்?’’ – சாயி சிரித்துக்கொண்டே கேட்டார்.
‘‘நாய் அந்தக் கல்லின்மேல் அசிங்கம் செய்யப் பார்த்தது. அது என்ன சாதாரணக் கல்லா?’’
‘‘அப்படி என்ன விசேஷம்?’’
‘‘முன்பெல்லாம் பயில்வான்கள் அதைத் தூக்கித்தான் உடற்பயிற்சி செய்தார்கள்…’’


‘‘இப்பொழுது யாரும் அதைத் தூக்குவதில்லையா? அப்படியானால் இது சாதாரணக் கல்… என்ன உபயோகம் அதனால்?’’
சாயியின் கேள்வியில் பரிகாசத் தொனி இல்லை. அதில் ஏதோ உள் அர்த்தம் இருந்தது இளைஞர்களுக்குப் புரிந்தது.
‘‘நீங்கள் எல்லோரும் இளவயதுக்காரர்கள், திடகாத்திரமானவர்கள். எங்கே தூக்குங்கள் பார்க்கலாம் அந்தக் கல்லை?’’
‘‘நாங்கள் என்ன பயில்வான்களா? நாங்கள் உடற்பயிற்சி செய்யவில்லையே…’’
‘‘நான்கு பேராகச் சேர்ந்து தூக்குங்கள் பார்க்கலாம். அதற்கு எதற்கு உடற்பயிற்சி?’’ – சாயி யோசனை சொன்னார்.
நான்கு இளைஞர்கள் முன் வந்தார்கள். ஒன்று சேர்ந்து பலம் கொண்ட மட்டும் முயற்சி செய்தார்கள். ம்ஹும்… அதை நகர்த்தக்கூட முடியவில்லை.


சாயி சிரித்தார். ‘‘எட்டு பேராகச் சேர்ந்து தூக்கிப் பாருங்கள்’’ என யோசனை சொன்னார்.
எட்டுப் பேர் சேர்ந்தும் கல்லைத் தூக்க முடியாமல், தளர்ந்து போய் சாயி அருகில் கட்டிலில் உட்கார்ந்தார்கள்.
‘‘என்ன இளைஞர்கள் நீங்கள்? மார்பில் கவசம் அணிந்து, போரில் சண்டையிட்டு வெற்றி காண்பதற்கான உறுதி வேண்டாமா? யாருக்குத் தன்னம்பிக்கை இல்லையோ, அவன் வாலிபனே அல்ல. இந்த இளம் வயதில் யாரிடம் மன உறுதி இல்லையோ, பொங்கி வரும் உற்சாகம் இல்லையோ, வெற்றி கொள்ளும் ஆர்வம் இல்லையோ, அவன் இளைஞனே அல்ல!’’
‘‘இதெல்லாம் பேசுவதற்கு அழகாக இருக்கலாம். நடைமுறைக்கு ஒத்து வராது.’’
‘‘ஏன் முடியாது?’’

‘‘உங்களுடைய தோற்றம் பயில்வானைப் போல இருக்கிறதல்லவா? நீங்கள் தூக்குங்கள் பார்க் கலாம்’’ –
ஒருவன் சாயியிடம் சொன்னான்.
எல்லோரும் ஆமோதித்தார்கள். ‘‘நாங்கள் உங்கள் பராக்கிரமத்தைப் பார்க்கணும்’’ என இளைஞர்கள் அனைவரும் சாயியை வேண்டினார்கள்.

‘‘சரி… சரி… முயற்சி செய்கிறேன்’’ – சாயி அதனருகில் வந்தார். இந்த வேடிக்கையைப் பார்க்க அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் கூடிவிட்டார்கள்.
‘‘வலது கையாலா அல்லது இடது கையாலா?’’ சாயி வலது முழங்காலைத் தரையில் ஊன்றி, எல்லோரையும் பார்த்துக் கேட்டார்.
அதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள்.
‘‘வலதும் இடதும் வேண்டாம். இரண்டு கைகளினால் தூக்குங்கள்… போதும்!’’
‘‘யாரும் இதுவரை ஒரு கையால் இந்தக் கனமான கல்லைத் தூக்கியதை நான் பார்த்ததில்லை. அது முடியவும் முடியாது. நீங்கள் அப்படித் தூக்கினால் அது அதிசயம் தான்!’’ என்றான் ஒரு கிழவன்.
அவர் இரண்டு கைகளாலும் அதை நகர்த்தினார். கூடியிருந்தவர்கள் கை தட்டினார்கள். ஏனெனில், எட்டு ஆட்கள் சேர்ந்தும் அக்கல்லை அசைக்க முடியவில்லையே!


சாயி தன் பலத்தையெல்லாம் திரட்டி, இரண்டு கைகளாலும் கல்லை கெட்டியாகப் பிடித்துத் தூக்கித் தன் மடியில் வைத்தார். ஒரு நிமிடம் இளைப்பாறி, வலது கையில் பிடித்தவாறே, இடது கைக்கு மாற்றி, மிகுந்த பிரயாசையுடன் வலது தோளில் வைத்து, நிமிர்ந்து நின்றார். அவருடைய அற்புதமான பலத்தைக் கண்டு, எல்லோரும் ஸ்தம்பித்து நின்றார்கள். பிறகு அதைக் கீழே போட்டார். ‘தொப்’ பென்ற சத்தம் எழுந்தது. மறுபடி இடது முழங்காலைத் தரையில் ஊன்றி, ஒரு கையால் அந்தக் கல்லை எடுத்து, இடது தொடையிலும், பிறகு இடது தோளிலும் வைத்துக்கொண்டு நிமிர்ந்தார். எல்லோருக்கும் திகைப்பில் பேச்சு வரவில்லை. சாயி அவர்களை மந்தகாசத்தோடு பார்த்தார். அவருக்கு மூச்சு வாங்கியது. முகம் சிவந்திருந்தது.
‘‘சாயி மகராஜ் கீ ஜே!’’

‘‘சாயி வாழ்க. அவர் புகழ் ஓங்குக!’’
ஜனங்களின் ஆரவாரமான கோஷம் விண்ணைப் பிளந்தது.
அந்தக் கல்லைக் கீழே போட்டுவிட்டு வியர்வையைத் துடைத்துக்கொண்டே, ‘‘பசங்களா, நான் யாசித்து சாப்பிடும் சாதாரண பக்கீர். என்னாலேயே இதைத் தூக்க முடிந்தால், உங்களால் ஏன் முடியாது? இன்றிலிருந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பியுங்கள். உறுதியான தேகத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். இதை உதாசீனம் செய்யாதீர்கள்’’ என்று சொல்லிவிட்டு எழுந்தார். சாயி போகும்போது வானத்தை நோக்கிப் பார்த்து எதையோ தேடினார். எதிர்காலத்தைப் பற்றி அவர் காதில் விழுந்ததைத் தீவிரமாகக் கேட்டுக்கொண்டிருப்பாரோ!
தேவிதாஸ் இதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அடிக்கடி ஷீரடி வந்து போவார். சிறந்த பண்பாளர். மக்களுக்கு சேவை செய்து நல்ல பெயரை வாங்கியிருந்தவர் அவர்.

சாயி பற்றி அவர் கேள்விப்பட்டிருந்தார். இன்றுதான் முதன்முதலாக சாயியைப் பார்த்தார். அவருடைய தேஜஸான உடம்பைக் கண்டு வியந்தார். ‘யாசித்து வாழும் இளைஞன், இவ்வளவு கட்டான உடலை எப்படி அடைந்தான்… எப்படி பல ஆண்டுகளாகத் தூக்க முடியாத கல்லை அசைத்து எடுத்து இரண்டு தோள்களிலும் தூக்கி விளையாடினான் என்பதை அவரே நேரில் கண்டார். இவர் சாதாரண பக்கீர் அல்ல. மகான். சூரியன். அவருடைய கிரணங்களில் நாமும் கலந்து பயன்பெற வேண்டி, அவரைத் தேடிப் போக வேண்டும்!’
‘‘ஷீரடி மண் அவரைப் போன்ற சாதுக்களை அடைய புண்ணியம் செய்திருக்கணும். அவர் சாதாரண யோகி அல்ல, சாட்சாத் கடவுள்’’ என்று அந்த இளைஞர்களிடம் சொன்னார் தேவிதாஸ்.
இதைக் கேட்டுக்கொண்டே அங்கு வந்தார், வைத்தியர் குல்கர்னி. மூக்குப்பொடி போட்டுக்கொண்டே, ‘‘என்ன அரட்டைக் கச்சேரி நடக்கிறது இங்கே? யார் இது? தேவிதாஸா? யாரை நீ கடவுள் என்றாய்?’’ என வினவினார்.

‘‘சாயியை…’’
‘‘யார் சாயி?’’
‘‘உங்களுக்கு சாயியைத் தெரியாதா? அவர் மசூதியில் இருக்கும் அதிசயமான பக்கீர்…’’ என்று யாரோ கூறியதும் தீயில் உப்புப் போட்டதுபோல படபடவென்று பொரிந்தார் குல்கர்னி.
‘‘அந்த சாயியா? அவன் அதிசயமானவனா? என்னென்ன அதிசயங்களை அவன் நிகழ்த்தினான்? தண்ணீரில் நெருப்பைப் பற்ற வைத்தானா? அல்லது ஆகாயத்தில் நடந்தானா? சொல்லுங்கள்… நானும் கேட்கிறேன்!’’
‘‘யாராலும் தூக்கமுடியாத இந்தக் கல்லை சர்வசாதாரணமாகத் தூக்குகிறார்.’’
‘‘அடேங்கப்பா…’’ – குல்கர்னி சத்தமாகச் சிரித்தார். ‘‘இந்தக் கல்லைத் தூக்கியதையா அதிசயம் என்கிறீர்கள்? ராமா! ராமா! எப்படிக் காப்பாற்றுவேன் இந்தப் பைத்தியக்கார ஜனங்களை?’’
‘‘இது உங்களுக்கு அதிசயமாகப் படவில்லையா?’’
‘‘கொஞ்சம்கூட இல்லை’’ – குல்கர்னி அடித் தொண்டையில் கத்தினார். புடலங்காய் போல இருந்த அவர் உடம்பு, மேலும் கீழும் ஆடிற்று. நரியின் வால் போல இருந்த அவருடைய குடுமி அசைந்தாடிற்று.

‘‘உங்களால் இந்த உருண்டைக் கல்லைத் தூக்க முடியுமா?’’
‘‘நானா?’’ மார்பை உயர்த்திக் காட்டி, ஒருவித அகங்காரத்துடன் குல்கர்னி கேட்டார்.
‘‘ஆமாம்… நீங்களேதான்…’’
‘‘தூக்குகிறேன். ஆனால்…’’
‘‘என்ன ஆனால்..?’’
‘‘நான் இதைச் செய்துவிட்டால், சாயியை ஷீரடியிலிருந்து விரட்டிவிட்டு, என்னை பூஜிக்கவேண்டும்.– Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!