2 குழந்தைகளையும் குரங்குகள் தூக்கிட்டு போயிட்டு..? சந்தேகம் கிளப்பும் வனத்துறையினர்..!


தஞ்சை அருகே பிறந்து ஒருசில நாட்களே ஆன இரட்டை பெண்குழந்தைகளை குரங்கு தூக்கி சென்று விட்டதாகவும், அதில் ஒரு குழந்தை அகழிக்குள் வீசப்பட்டதால் இறந்து விட்டதாகவும் அக்குழந்தைகளின் உறவினர்கள் தெரிவித்த நிலையில், தற்போது அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என வனத்துறையினர் தெரிவித்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

தஞ்சை அருகில் மேல அங்கம் பகுதியை சேர்ந்த தம்பதிகள் ராஜன்-புவனேஸ்வரி. இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இரட்டை பெண்குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் பிறந்து எட்டே நாட்கள் ஆன நிலையில் கடந்த 13ம் தேதி வீட்டில் உறங்கி கொண்டிருந்த குழந்தைகளை குரங்குகள் தூக்கி சென்றுவிட்டதாகவும், அதில் ஒரு குழந்தையை வீட்டின் கூரையின் மீதும் மற்றொரு குழந்தையை அகழிக்குள்ளும் வீசியதால் அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததாகவும் குழந்தையின் உறவினர்களால் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்த விபரங்களை போலீசாரிடமிருந்து கேட்டறிந்த வனத்துறையினர் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும் போது “குரங்குகள் குழந்தைகளை தூக்கி சென்றதாக கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. குரங்குகள் ஒரு கையால் குழந்தையை கையாள்வது என்பது இயலாத காரியம். மேலும் குழந்தையின் உடலில் குரங்கின் உரோமமோ, நகக்கீறலோ இல்லை. குரங்கு உண்டாக்கிய காயங்கள் எதுவுமில்லை” எனவும் “குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உண்மை என்னவென்று தெரிய வரும்” என்றும் தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் கிளப்பிய இந்த சந்தேகம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.- source: daily.tamilnadu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!