விசாரணையின் போது மாடியிலிருந்து குதித்து இளைஞர் செய்த விபரீதம்..!


திருச்சி அருகே விசாரணையின் போது காவல் நிலையம் மாடியிலிருந்து குதித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரசாத் (27). வெல்டராக வேலை பார்த்து வந்தார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறில் அந்தப் பெண்ணின் சகோதரரை பிரசாத் மற்றும் அவரது தந்தை மணி ஆகியோர் சேர்ந்து தாக்கியதில் பெண்ணின் சகோதரர் இறந்துள்ளார். இந்த கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்பான வழக்கு இவர் மீது உள்ளது.

இந்நிலையில் பிரசாத் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக முசிறி அடுத்துள்ள ராக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த மைனர் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசாத் மனைவியின் ஆதார் கார்டு எண் கேட்டு மனைவியின் குடும்பத்தினருக்கு பிரசாத் போன் செய்துள்ளார். மகளை தேடி வந்த பெற்றோர் காணாமல் போன மகள் பிரசாத் மூலம் கடத்தப்பட்டுள்ளதை அறிந்து, ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் தனது மகளை மீட்டு தரவேண்டும் என புகார் கொடுத்தனர்.

அப்போது தான் பிரசாத் திருப்பூரில் அவரது மனைவி மற்றும் இரண்டு வயது மகனுடம் வசித்து வந்தது தெரியவந்தது. நேற்று காலை போலீசார் பிரசாத் மற்றும் மனைவியை அழைத்து கொண்டு காவல் நிலையம் வந்தனர். அப்போது பிரசாத் திருமணம் செய்து வாழ்ந்து வரும் பெண்ணிற்கு இன்னும் 18 வயது முடியவில்லை என்பது தெரியவந்தது.

இதனையடுத்து பிரசாத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய போலீசார் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை ஜெகநாதபுரம் போலீஸ் ஸ்டேஷன் மாடியில் இருந்து பிரசாத் கீழே குதித்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த பிரசாத் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் நேற்றிரவு பிரசாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த மத்திய மண்டல காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) செந்தில்குமார் ஆகியோர் ஜெம்பு நாதபுரம் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!