போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்மமாக மரணம்… பின்ணனியில் பகீர் தகவல்..!


ராணிப்பேட்டை அருகே போதை மறுவாழ்வு மீட்பு மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வானாபாடி அடுத்த மாணிக்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (27). இவர் புதுப்பாடி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் தற்காலிகமாக பணிபுரிந்து வருகிறார்

இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. இவர் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதன் காரணமாக மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவரை ராணிப்பேட்டை அடுத்த சீயோன் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் நியூ லைஃப் ஹோம் என்கிற பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனமான போதை மறுவாழ்வு மையத்தில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி அவரை மது போதையில் இருந்து மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் சேர்த்து விட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று மாலை நியூ லைஃப் ஹோம்மின் நிறுவனர் கிரண் சரவணன் வீட்டிற்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு சரவணன் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையான எஸ்.எம்.எச். மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார்.

கிரண், சரவணனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தபோது வரும் வழியிலேயே சரவணன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சரவணனின் மனைவி மற்றும் உறவினர்கள் எஸ்.எம்.எச் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். சரவணன் உடல்நிலை குறித்து விசாரித்தபோது சரவணன் மருத்துவமனையில் உயிரிழந்து சடலமாக உள்ளார் என்பது உறவினர்கள் விசாரித்தபோது தெரிய வந்தது.

பின்னர், ஆத்திரமடைந்த உறவினர்கள் எஸ்.எம்.எச் மருத்துவமனை எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில் ஒரு தரப்பினர் நியூ லைஃப் ஹோம் என்கிற போதை மறுவாழ்வு மீட்பு மையத்தை சரமாரியாக அடித்து சுக்குநூறாக்கினர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ராணிப்பேட்டை போலீசார் சரவணனின் உறவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உறவினர்கள் சரவணன் அடித்து கொல்லப்பட்டதாகவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து நியூ லைஃப் ஹோம் போதை மீட்பு மையத்தின் நிறுவனர் கிரண் விசாரணைக்காக ராணிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மேலும், சரவணன் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனையின் முடிவு பொருத்தே கிரண் கைது செய்யப்படுவாரா இல்லையா என்பது தெரிய வரும்.

இந்நிலையில் அடித்து நொறுக்கப்பட்ட மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவரும் பலர் உடலில் பலத்த காயங்களுடன் காணப்பட்டனர். அவர்களை தொடர்ந்து தாக்குவதாகவும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் தெரிவித்தனர்.

குடி போதையில் இருந்து மீண்டும் வருவார் என போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.- source: dinamani

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!