பெண்களுக்கு காதலனிடம் பிடிக்காத விஷயங்கள் என்னென்ன தெரியுமா?


காதலரிடமிருந்து விலகுவது என்ற முடிவை பெண்கள் எடுப்பதற்கு முன்னால் ஒன்றுக்கு பலமுறை யோசிக்கவேண்டும். யோசித்து அந்த முடிவை எடுத்துவிட்டால், தைரியமாக அதனை நடைமுறைப்படுத்தவேண்டும்.

காதல் சுகமானதுதான். ஆனால் காதலன் மோசமானவர் என்பது தெரிந்தால், அவரிடமிருந்து விலகித்தானே ஆகவேண்டும். அதே நேரத்தில் அந்த விலகல், கூடுதலாக எந்த பிரச்சினையையும் உருவாக்கிவிடாத அளவுக்கு அதில் இருந்து பக்குவமாக விடுபடவேண்டும்.

பொதுவாக பெண்களுக்கு காதலனிடம் பிடிக்காத விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

அதிக சுயநலம் கொண்டவரையும், சோம்பேறியையும் பெண்களுக்கு பிடிக்காது. தனது அன்பை துச்சமாக மதித்து அலட்சியம் காட்டுபவரையும் பெண்கள் விரும்புவதில்லை. முதல் பார்வையில் வந்த ஈர்ப்புக்கும், பழகிய அனுபவத்தில் கிடைத்த புரிதலுக்கும் வேறுபாடு ஏற்பட்டு இருவருக்குள்ளும் அடிக்கடி கருத்துமோதல் வந்தால், அந்த காதலை தொடர்வது பற்றி பரிசீலித்துதான் ஆகவேண்டும்.

ஒழுக்க அளவிலான குறைபாடுகளை காணும்போது அவரிடம் காதலை தொடர முடியாது. உங்களைப் போலவே மற்ற பெண்களிடமும் காதல் வலை வீசும் ஆண்களின் தொடர்பை உடனே துண்டிப்பது நல்லது. அதுபோலவே நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு, உடல்ரீதியான தொடர்புக்கு வலியுறுத்தும் காதலரிடமும் எச்சரிக்கை தேவை. ‘என்மேல் உனக்கு நம்பிக்கையில்லையா?’ என்று பேச்சில் தூண்டில்போடும் காதலர்களில் பலர், உடல் தொடர்புக்கு பின்னர் காதலை உதறித் தள்ளிவிட்டு போன சம்பவங்கள் நிறைய உள்ளன. இதுபோல் பெண்களை தவறாகப் பயன்படுத்தும் எண்ணத்துடன் பழகும் காதலர்களிடம் இருந்து விலகிவிடுவதும் நல்லது.


காதலரிடமிருந்து விலகுவது என்ற முடிவை பெண்கள் எடுப்பதற்கு முன்னால் ஒன்றுக்கு பலமுறை யோசிக்கவேண்டும். யோசித்து அந்த முடிவை எடுத்துவிட்டால், தைரியமாக அதனை நடைமுறைப்படுத்தவேண்டும். அந்த முடிவை அவரிடம் தெரிவித்த பின்பு அவரது பதில்களையும், உணர்வுகளையும் உற்று நோக்குவது அவசியம். அதிக உணர்ச்சிவசப்படுபவராக இருக்கிறாரா? கோபமும், பழிவாங்கும் உணர்வுடன் செயல்படுகிறாரா? என்பதையும் கவனிக்கவேண்டும்.

அவர் முரண்டு பிடிக்கும் நபராக இருந்தால் அவரை மரியாதைக் குறைவாக பேசிவிடக்கூடாது. அவரது ‘ஈகோவை’ தூண்டிவிடும் வகையிலும் நடந்துகொள்ளக்கூடாது. அப்படிப்பட்டவரிடம் ‘நீங்கள் என்னை ஏமாற்றிவிட்டீர்கள்’ என்று சொல்வதற்குப் பதிலாக, ‘நீங்கள் அப்படி நடந்து கொண்டதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை’ என்று கூறவேண்டும். பக்குவமான வார்த்தைகளை நிதானமாக பேசவேண்டும். அதே நேரத்தில் பேச்சில் தன்னம்பிக்கையும், தெளிவும் இருப்பது அவசியம். இதுபற்றி மனோதத்துவ நிபுணர்கள் தரும் ஆலோசனையை கேட்போம்!

“காதலருடனான தொடர்புகளை ஒரேயடியாக அல்லாமல், மெல்ல மெல்ல குறைக்கலாம். அவரது செல்போன் அழைப்புகளை முற்றிலும் புறக்கணித்து விடாமல், அவருக்கே புரியும்விதத்தில் தவிர்க்கலாம். நேரடி சந்திப்புகளுக்கு முடிவு கட்டிவிடலாம். சந்தித்தே ஆகவேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டால், பொது இடங்களில், பாதுகாப்பான இடங்களில் சில நிமிடங்கள் சந்தித்துவிட்டு, நெருக்கமான விஷயங்களை விவாதிப்பதை தவிர்த்து விட்டு விலகிவிட வேண்டும். பின்னர் படிப்படியாக அந்த சந்திப்புகளையும் வெவ்வேறு காரணங்களைக்கூறி தவிர்த்துவிடலாம். காதலரின் வற்புறுத்தலுக்கு இணங்கி எங்கும் தனியே சந்திக்க செல்ல வேண்டாம். நீங்கள் காதலை முறித்துக்கொள்வது பற்றி உங்கள் பெற்றோரிடம் கூறி, அவர்களது ஆதரவோடு உங்கள் திட்டத்தை செயல்படுத்துங்கள்” என்கிறார்கள்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!