‘துணை’ குறும்பட விமர்சனம் | Thunai Tamil Short Film Review

‘அட’ என்று ஆச்சரியப்பட வைக்கிறது ‘துணை’ குறும்படம். காதலன் காதலிக்குள் வாக்குவாதம், காதலன் எழுந்து செல்கிறான். காதலி அவன் வருவான் என்று காத்திருக்கிறாள். காதலன் வரவில்லை. அடுத்த காட்சியில் வேறொரு ஆடவனுடன் காதலி அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறாள்.

தொடர்ந்து வருகின்ற காட்சிகள் படத்தின் கதையை புரட்டிப் போடுகின்றன. நாம் ஊகிக்க முடியாத ஒரு திருப்பத்திற்குள் படம் நுழைகிறது. பெண்ணின் உணர்வுகளுககும் உரிமைகளுக்குமான நியாயத்தை இயக்குனர் 17 நிமிடங்களுக்குள் படமாக்கி தந்திருக்கிறார். உணர்வுபூர்வமாக சொல்ல வேண்டிய கதையை சஸ்பென்ஸ் பாணியில் சொன்னது சரியா என்பது விவாதத்திற்கு உரியது. ஆனாலும் அதுவே படத்தை ரசிக்க வைக்கிறது.

வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் நடித்திருக்கிறார்கள். அவர்கள் பேசுகின்ற தமிழ் பலருக்கு புதிதாக இருக்கலாம். இயக்குனர் வேண்டுமென்றே இப்படி பேச வைத்தாரா என்று தெரியவில்லை. ஆனால் அதிலும் ஒரு இனிமை உண்டு. வசனங்களை நீட்டி முழக்காமல் சுருக்கமாக பேச வைத்திருக்கிறார்.


நாம் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படம் பார்த்திருப்போம். ஒரு பெண் ‘இல்லை’ என்று சொன்னால் அதன் பொருள் ‘இல்லை’ என்பதுதான் என்று அந்தப் படம் அழுத்தமாக சொன்னது. ஆனால் ‘இல்லை’ என்பதற்கு எப்பொழுதுமே ‘இல்லை’ என்று பொருள் கொள்ள முடியாது என்று ‘துணை’ கூறுகிறது. எந்தச் சந்தர்ப்பத்தில் ‘இல்லை’ என்பதை கேட்கிறோம் என்பதை பொறுத்து இரண்டு கூற்றுமே சரியாகிறது. பல ஆண்கள் இதை மாறிப் புரிந்து கொள்வதுதான் பல சிக்கல்களுக்கு காரணம்.

இயக்குனருக்கு இது முதல் படமாம். சிறு சிறு குறைகள் உண்டு. ஆனால் படம் சொல்ல வந்த கருத்திற்காகவும் ரசிக்கத்தக்க வகையில் படமாக்கியதற்காகவும் இயக்குனரை பாராட்டலாம்.

கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு குறும்படம் ‘துணை’