பாபாவை நம்பு… ஸ்ரீ சாயிபாபாவின் விபூதியை நாள்தோறும் இட்டுக் கொள்ளுங்க…!


பாபாவின் படம், அத்தகைய குறிக்கோளை அடைய முயலும்படித் தூண்டுகிறது. பாபாவின் படத்தைப் பார்ப்பது மிகவும் சக்தி வாய்ந்த சாதனையாகும். பாபாவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். சாய்பாபாவின் மேல் உள்ள நம் பக்தியை வளர்த்துக் கொள்வதற்குரிய சில கருத்துக்களைக் கூறுவது உபயோகமாயிருக்கும் என்று கருதுகிறேன்.

முதன்முதலில் சாயிபாபாவின் ஓர் உருவப்படம் இன்றியமையாத ஒன்று. ஏனெனில், பாபாவும் அவரது படமும் வேறல்ல. தவிர, அது பாபாவின் மேல் இடையறாத தியானம் செய்ய வேண்டியதின் உயர்வைப் பற்றிச் சக்திவாய்ந்த முறையில் நினைவுபடுத்துகிறது. இரண்டாவதாக, பாபாவின் வாழ்க்கைச் சரிதத்தைத் தவறாமல் பாராயணம் செய்வது, நமது மனதை ஆத்மீகக் குறிக்கோளை நோக்கி இழுக்கும். நமது எல்லா எண்ணங்களும் உணர்வுகளும் பாபாவைப் பற்றியே வட்டமிடும்படிச் செய்யும். பாபாவின் சரிதத்தைக் கற்ற புத்திசாலியான ஒருவருக்குத் தடையே உதவியாக மாறிவிடுகிறது.


மூன்றாவதாக, எப்போதுமே பாபாவின் நினைவிலேயே மூழ்கி, அவரது திவ்ய நாமத்தை இடையறாது உச்சரிப்பதில் நம் மனதை ஈடுபடுத்தும்படியான வழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம். நாலாவதாக, நாம் எதை உண்டாலும் அல்லது பருகினாலும், அதை மானசீகமாகப் பாபாவுக்கு நிவேதனம் செய்து, அவரது பிரசாதமாக உண்ணும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

ஐந்தாவதாக, நாளின் முதல் 15 நிமிட நேரத்தை, நாள் முழுவதும் நாம் பாபாவின் நினைவில் தோய்ந்திருப்பதற்காக, நம் பாவனையை இசைவு செய்து கொள்ளுவதில் செலவிட வேண்டும். மீண்டும், தூங்குவதற்கு முன், நாளின் இறுதி 15 நிமிடங்களையும் பாபாவைப் பற்றிச் சிந்திப்பதிலும் செலவிட முயல வேண்டும். ஆறாவதாக, ஸ்ரீ சாயிபாபாவின் விபூதியை நாள்தோறும் இட்டுக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஏழாவதாக, வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் பாபாவை மனமார வழிபடுவதற்காக ஒதுக்க வேண்டும். பாபா, தமது படத்தோடு ஒன்றுப்பட்டவர் என்பதைப் பலமாக நினைவுகூர்ந்து, அவரது இருப்பை உணர்ந்து, அவரது படத்தைப் பூஜை செய்ய வேண்டும். எட்டாவதாக முடிந்த போதெல்லாம், தினசரி, வாரந்திர சாய் சத்சங்கத்தில் பங்கேற்க முயல வேண்டும்.-Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!