ஆண்டாள் எனக்கு பாலூட்டி வளர்த்த தாய் போன்றவர்… கவிஞர் வைரமுத்து பேட்டி…!


ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் வைரமுத்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு இது சம்பந்தமாக விரிவான பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம்:-

கேள்வி: நீங்கள் எப்படி இந்த மாதிரி சர்ச்சையில் சிக்கி கொண்டீர்கள்?

பதில்: தமிழ்மொழி 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தமிழ் இலக்கியத்துக்கு தனது பெரும் பங்களிப்பை செய்தவர்களை பற்றி நான் தொடர்ந்து ஆய்வு செய்து பதிவு செய்து வருகிறேன். தொல்காப்பியரில் இருந்து பாரதியார், புதுமைபித்தன் வரை இவ்வாறு ஆய்வு செய்துள்ளேன். இவற்றை ஒரே புத்தகத்தில் கொண்டு வந்து பலஆயிரம் ஆண்டுகளுக்கும் தமிழ் நமது சமுதாயத்தில் நீடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்காக நான் தொடர்ந்து படித்து வருகிறேன்.

நான் இதுவரை திருவள்ளுவர், கம்பர், வள்ளுவர், பாரதியார் பற்றி 13 புத்தகங்கள் எழுதி உள்ளேன். நாயன்மார்களில் அப்பர், ஆழ்வார்களில் ஆண்டாள் ஆகியோரை பற்றியும் ஆய்வு செய்கிறேன். ஆண்டாளின் தமிழை நான் 40 ஆண்டுகளாக சுவாசித்து வாழ்ந்து வருகிறேன். ஆண்டாளின் மூலம் அந்த கால சமூகத்தையும், சூழலையும் பார்க்கிறேன்.

ஆண்டாளின் வைஷ்ணவத்தைவிட அவருடைய தமிழால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளேன். அவருடைய தமிழை மட்டும் நான் கொண்டாடவில்லை. அவர் பெண்களின் ஆளுமைக்காக முதல் குரல் கொடுத்ததையும் கொண்டாடுகிறேன்.


கே: நீங்கள் ஆண்டாளை பற்றி பேசியதும், எழுதியதும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டதே?

ப: நான் ஆண்டாள் பற்றி 35 அல்லது 40 நிமிடங்கள் பேசினேன். அது நல்ல வரவேற்பை பெற்றது. நான் பல்வேறு உதாரணங்களை மேற்கோள் காட்டி விளக்கி கூறினேன். ஆண்டாளை பல்வகையிலும் புகழ்ந்து பாராட்டி நான் பேசினேன். அப்போது ஆண்டாளை பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரையில் உள்ள வி‌ஷயங்களைப்பற்றியும் கூறினேன். ஆண்டாள் தேவதாசியாக ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து அங்கு இறந்ததாக அந்த ஆராய்ச்சி கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாக கூறினேன்.

கடவுளாகவும், கடவுளுக்கு சேவை செய்தவராகவும் கூறப்படும் ஆண்டாளை பற்றி இப்படி அதில் எழுதப்பட்டிருக்கிறது என்று மேற்கோள்காட்டி சொன்னேன். ஆராய்ச்சி கட்டுரையில் கூறப்பட்டுள்ள அந்த வார்த்தை தற்போது தவறான அர்த்தத்தில் மாறி இருக்கிறது. அதில் தாசி என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்பது வேறு. ஆனால் இடையில் தாசியை வேசி என்பதுபோல வேறு அர்த்தத்தை ஏற்படுத்திவிட்டார்கள். நான் இதுபற்றி விரிவாக சொன்னபோதும், அதை புரிந்து கொள்ளவில்லை.

அந்த வார்த்தை இப்படி மாறியது தொடர்பாக யாரும் கேள்வி எழுப்பவும் இல்லை, ஒத்துக்கொள்ளவும் இல்லை. இதன் மூலப்பொருள் தவறு இல்லை என்றால் நான் மேற்கோள் காட்டி சொன்னது மட்டும் எப்படி தவறு ஆகும்.


கே: ஆனால் உங்களை மட்டும் தானே குற்றம் சொல்கிறார்கள்?

ப: நான் ஆண்டாளை குறைத்து மதிப்பிட்டோ அல்லது சிறுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலோ அந்த மேற்கோளை பயன்படுத்தவில்லை. ஆண்டாள் எனக்கு பாலூட்டி வளர்த்த தாய் போன்றவர். ஆண்டாள் தனது தமிழை எனக்கு ஊட்டி என்னை இந்த அளவுக்கு வளர்த்துள்ளார். அப்படி இருக்க நான் எனது தாயை சிறுமைப்படுத்துவேனா?

அது ஒரு ஆராய்ச்சி கட்டுரை. எல்லோராலும் அதை புரிந்து கொள்ள முடியாது. இப்படி நான் சொல்வதால் மீண்டும் அவர்கள் என்னை தவறாக புரிந்து கொள்ளும் நிலை ஏற்படலாம். இந்த வி‌ஷயத்தில் அரசியல் தூண்டுதல் இருக்கிறதா? என்பதை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் வேண்டுமென்றே இந்த வி‌ஷயம் திரிக்கப்படுகிறது.

கே: உங்களை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்களே?

ப: நான் ஏற்கனவே வருத்தம் தெரிவித்துவிட்டேன். தமிழ் எழுத்தாளர்களும் இதுபற்றி விளக்கி இருக்கிறார்கள். நான் எப்போதுமே உண்மையையே பேசுகிறேன். இந்த வி‌ஷயத்தில் இதற்கு மேல் நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. நான் அவரது பிறந்த ஊரில் சென்று அவரை அவமதிக்கும் வகையில் பேசுவேனா? நான் அவருடைய இலக்கியத்தை பரப்ப வேண்டும் என்று விரும்புகிறவன். இப்போது முதல் முறையாக பகுத்தறிவாளர்களும் ஆண்டாளுடைய பணியை பாராட்டி இருக்கிறார்கள். நான் எப்போதுமே எனது பணியில் உண்மையாக நடந்து கொள்பவன். எனது பக்கம் எப்போதும் நீதி இருக்கும்.

இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!