காருடன் தீயில் கருகி கிடந்த தொழிலதிபர்..? போலீசார் தீவிர விசாரணை


வாடிப்பட்டி அருகே காருடன் தீயில் கருகி இறந்து கிடந்த தொழிலதிபர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி புளியங்கண்மாய் பாலத்தின் கீழ்புறம் ஓடைக்குள் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்து. உடனே நிலைய அதிகாரி சதக்கத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

அப்போது காரின் பின் இருக்கையில் கருகிய நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின் தலைமையில் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது காருக்குள் இறந்து கிடந்தவர் மதுரை அய்யர் பங்களாவை சேர்ந்தவர் தொழிலதிபர் சிவானந்தம் (வயது 58) என்பது தெரிய வந்தது.

அவர் கே.கே.நகர் பகுதியில் மருந்து கடை நடத்தி வந்தார். அவருக்கு ராஜூ என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மகள் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

சிவானந்தம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரில் கோவையில் உள்ள தனது தம்பி வீட்டிற்கு சென்று விட்டு அதன் பின்னர் பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து நேற்று மதியம் 12 மணிக்கு மதுரையை நோக்கி வந்துள்ளார். அதன் பின்னர் விராலிப்பட்டி புளியங்கண்மாய் பாலத்தின் கீழ் புறம் அணுகுசாலை வழியாக ஓடைக்குள் கார் ஏன் சென்றது, எப்படி தீப்பிடித்து எரிந்தது, காரை ஓட்டி வந்த சிவானந்தம் பின் சீட்டில் அமர்ந்து கருகிய நிலையில் எப்படி பிணமானார் என்று தெரியவில்லை.

அவர் தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு யாராவது அடித்து கொலை செய்து விட்டு பின் இருக்கையில் அவரது உடலை வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனரா என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தகவல் அறிந்த டி.ஐ.ஜி. ராஜேந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் ஆகியோர் நேரில் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!