பலத்த மழை… வீடு இடிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளிக்கு நடந்த சோகம்..!


பல்லாரியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. அப்போது வீடு இடிந்து விழுந்ததில் தம்பதி பலியாகினர்.

பல்லாரி (மாவட்டம்) டவுன் கவுல் பஜார் பகுதி அதோனி தெருவில் வசித்து வந்தவர் கோலண்ணா(வயது 45). இவரது மனைவி சாவித்திரி(40). இவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டு வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு சந்தோஷ்(13) என்ற மகன் இருக்கிறான். கோலண்ணா கூலித்தொழிலாளி ஆவார். அதேபோல் சாவித்திரியும் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் கோலண்ணா, சாவித்திரி, சந்தோஷ் ஆகிய 3 பேரும் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. திடீரென பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் 3 பேரும் வீட்டிற்குள் படுத்து நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் திடீரென வீட்டின் மேற்கூரை பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து விழித்தெழுந்த சந்தோஷ் வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்துவிட்டான். ஆனால் கோலண்ணாவும், அவரது மனைவி சாவித்திரியும் வீட்டிற்குள்ளேயே சிக்கிக் கொண்டனர். இதனால் அவர்கள் மீது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய அவர்கள் படுகாயம் அடைந்தனர்.

வீடு இடியும் சத்தத்தையும், சந்தோசின் அலறல் சத்தத்தையும் கேட்ட அக்கம்பக்கத்தினர் விழித்தெழுந்து ஓடி வந்து பார்த்தனர். அப்போது வீடு இடிந்து, கோலண்ணாவும், சாவித்திரியும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டிருப்பது அவர்களுக்கு தெரியவந்தது. பலத்த மழையின் காரணமாக வீடு இடிந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் கோலண்ணாவையும், சாவித்திரியையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. பின்னர் இதுபற்றி கவுல் பஜார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிய கோலண்ணாவையும், சாவித்திரியையும் மீட்டனர்.

அப்போது அவர்கள் 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி இறந்திருந்தது தெரியவந்தது. அவர்களின் உடல்களைப் பார்த்து சந்தோஷ் கதறி அழுதான்.

பின்னர் அவர்களது உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கவுல் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாயும், தந்தையும் இறந்துவிட்டதால் சந்தோஷ் அனாதையாகி உள்ளான். அவனை அவனுடைய உறவினர்கள் தங்களுடன் அழைத்துச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!