வீட்டின் முன்பு போராட்டம் நடத்தி காதலனை கரம்பிடித்த இளம் பெண்..!


திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் காதலன் வீட்டின் முன்பு இளம்பெண் ஒருவர் தர்ணா போராட்டம் நடத்தி காதலனை கரம் பிடித்தார்.

திருத்துறைப்பூண்டியில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகள் ராம்பிரியா(வயது 20). இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் தங்கராஜ் மகன் விக்னேஷ்(29). என்ஜினீயரிங் படித்துள்ள விக்னேஷ் தற்போது பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.

விக்னேசும், ராம்பிரியாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு விக்னேஷ் வீட்டில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ராம்பிரியா தனது தந்தை சங்கரிடம் கூறி தனக்கு வேறு மாப்பிள்ளை பார்க்குமாறு கூறினார். இதைத்தொடர்ந்து வேதாரண்யம் அருகே உள்ள தாணிக்கோட்டகம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், ராம்பிரியாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

வருகிற 25-ந் தேதி ராம்பிரியாவுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விக்னேஷ், ராம்பிரியா வீட்டுக்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் தன்னை விட்டு வேறு வாலிபரை திருமணம் செய்தால் நாம் இருவரும் சேர்ந்து உள்ள புகைப்படங்களை உனது வருங்கால கணவரிடம் காட்டிவிடுவேன் என கூறி ராம்பிரியாவை மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டு ராம்பிரியா, விக்னேசின் வீட்டுக்கு வந்தார். அப்போது விக்னேஷ் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு அங்கிருந்து வேறு ஊருக்கு சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து ராம்பிரியா திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் விக்னேஷ் வீட்டின் முன்பு ராம்பிரியா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவர் தன்னை விக்னேஷ் திருமணம் செய்யும் வரை இங்கிருந்து செல்ல மாட்டேன் என கூறி அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதைத்தொடர்ந்து விக்னேசை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ராம்பிரியாவை திருமணம் செய்து கொள்ள விக்னேஷ் சம்மதம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு கோவிலில் வைத்து போலீசார் திருமணம் செய்து வைத்தனர்.

இந்த சம்பவத்தால் திருத்துறைப்பூண்டியில் நேற்று பெரும் பரபரப்பு நிலவியது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!