15 முறை துப்பாக்கியால் சுடப்பட்ட யானை… ஒரு மாத போராட்டம் – நிகழ்ந்த துயரம்..!


தாய்லாந்து நாட்டில் மர்ம நபர்களால் 15 முறை துப்பாக்கியால் சுடப்பட்ட யானை ஒரு மாத போராட்டத்திற்கு பின் உயிரிழந்து உள்ளது.

தாய்லாந்து நாட்டின் வன பகுதியில் 2 ஆயிரம் யானைகள் வரை வாழ்ந்து வருகின்றன. அவை அடர்ந்த காட்டுக்குள், நாட்டில் பாதுகாக்கப்பட்ட தேசிய பூங்காக்களில் சுற்றி திரிபவை.

அந்நாட்டில் பாதுகாக்கப்பட்ட விலங்காக யானைகள் உள்ளன. அவற்றை கொல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறும் பட்சத்தில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

வன பகுதியை விளைநிலம் ஆக மற்றும் உணவு சேகரிக்க பயன்படுத்தும் மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்படுவதுண்டு.

இந்நிலையில், யானை ஒன்று மர்ம நபர்களால் துப்பாக்கியால் 15 முறை சுடப்பட்டு, உயிருக்கு போராடி ஒரு மாத சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் ரேயாங் மாகாணத்தில் என்கா சன் என்ற யானை பனை மரதோப்பில் மயங்கி கிடந்துள்ளது. அதனை வனவாழ் கால்நடை மருத்துவர்கள் கண்டறிந்து ஆய்வு செய்துள்ளனர்.

இதில் யானையின் பின்புறம், வால் மற்றும் முன்னங்கால் என பல இடங்களில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்கள் இருந்துள்ளன. யானையின் நுரையீரல்கள், இருதயம் மற்றும் குடல்கள் உள்ளிட்ட முக்கிய உள் உறுப்புகள் குண்டுகளால் துளைக்கப்பட்டு இருந்தன.

அதனை மீட்ட மருத்துவ குழு ஏறக்குறைய ஒரு மாதம் வரை சிகிச்சை அளித்துள்ளனர். இதன்பின்னர் அந்த யானை மீண்டும் வனத்திற்குள் விடப்பட்டது.

ஆனால் இந்த முறை அந்த யானை சேறு நிறைந்த குளத்திற்குள் 48 மணிநேரம் வரை மயங்கி கிடந்துள்ளது. யானைக்கு காயத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளால் அதிகம் சோர்வுற்றுள்ளது. நீண்டநேரம் சேற்றில் இருந்ததில், அதன் உடல் வெப்பநிலை குறைந்து விட்டது.

இதனால், குளத்தில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு உள்ளது. யானையை வெதுவெதுப்புடன் வைக்க தீ மூட்டப்பட்டு உள்ளது. எனினும், அதனை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

இதனால், யானை புதைக்கப்பட்டது. அதற்கு முன் வன துறை அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் என பலர் இறந்த யானைக்க மலர் தூவி, புனித நீரை ஊற்றி மன்னிப்பு கோரும் சடங்கு செய்தனர். துப்பாக்கியால் சுட்டு என்கா சன் யானையை கொன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!