பெண் தொழிலாளியின் 3½ மாத பச்சிளம் குழந்தை வீசிச் சென்ற மர்மநபர்கள்..?


கோயம்பேடு மார்க்கெட்டில் பெண் தொழிலாளி ஒருவரின் 3½ மாத பச்சிளம் குழந்தையை மர்ம நபர்கள் கடத்தி சென்ற நிலையில் அம்பத்தூர் பஸ் நிலைய பிளாட்பாரத்தில் போலீசார் மீட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 29). இவரது மனைவி சந்தியா (24). இவர்களுக்கு திருமணமாகி சஞ்சனா என்ற 3½ மாத பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. தம்பதிகள் இருவரும் கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இருவரும் சாப்பிட்டு விட்டு கடையின் முன்பு உள்ள திண்ணையில் தாயின் அருகிலேயே குழந்தையை படுக்க வைத்து குடும்பத்துடன் தூங்கி விட்டனர். பின்னர், அதிகாலையில் குழந்தைக்கு பால் கொடுக்க சந்தியா எழுந்து பார்த்தபோது அருகே படுத்திருந்த குழந்தை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால் பெற்றோர் கதறி அழுதனர். இதையடுத்து கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.

இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் உள்ளிட்ட போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குழந்தையை கடத்திச் சென்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வந்தனர்.

இதையடுத்து கடத்தியவர்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து ஏதேனும் வாகனத்தை பிடித்து தப்பிச் சென்றிருக்கலாம் என்பதால் பஸ் போக்குவரத்து ஊழியர்கள், வாடகை ஆட்டோ, கார் டிரைவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கோயம்பேடு போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், நேற்று இரவு அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் கேட்பாரற்று ஒரு குழந்தை இருப்பதை கண்ட பொதுமக்கள், இது குறித்து அம்பத்தூர் எஸ்டேட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து சென்று அந்த குழந்தையை மீட்டதை அடுத்து, அது கோயம்பேட்டில் காணாமல் போன குழந்தை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த குழந்தையை மீட்டு கோயம்பேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் குழந்தையை கடத்தி சென்று பிளாட்பாரத்தில் வீசி சென்ற நபர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!