முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ்க்கு என்னாச்சு..?


மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கபில் தேவ், தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான கபில் தேவுக்கு (வயது 62), நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்னர் அவரது உடல் நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கபில் தேவின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கபில் தேவ் விரைவில் நலம்பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.


இந்நிலையில், கபில் தேவ் தனது உடல்நிலை சீரடைந்து வருவது தொடர்பான தகவலை வெளியிட்டு, தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ‘என்மீது கொண்டுள்ள அளவுகடந்த அன்பு மற்றும் அக்கறைக்கு அனைவருக்கும் நன்றி. உங்களின் வாழ்த்துக்களால் உடல்நிலை பாதிப்பில் மீண்டு வருகிறேன்’ என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் கபில்.

கபில் தேவ் மருத்துவமனையில் இருந்தபோது எடுத்த புகைப்படமும் வெளியாகி உள்ளது. அதில், உற்சாகமாக காணப்படுகிறார் கபில் தேவ். உடன் அவரது மகள் இருக்கிறார்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!